/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த தமிழக அரசு - என்.எல்.சி., ஆலோசனை
/
எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த தமிழக அரசு - என்.எல்.சி., ஆலோசனை
எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த தமிழக அரசு - என்.எல்.சி., ஆலோசனை
எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த தமிழக அரசு - என்.எல்.சி., ஆலோசனை
ADDED : மே 04, 2025 05:26 AM

நெய்வேலி : சென்னை தலைமை செயலகத்தில் என்.எல்.சி., மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்திற்கிடையே தமிழகத்தின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்த உயர்நிலைக் கூட்டம் நடந்தது.
மத்திய நிலக்கரித்துறை அமைச்சக செயலர் விக்ரம் தேவ்தத், தமிழக தலைமை செயலர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் இணை செயலர் சஞ்சீவ் குமார் காஸ்ஸி, கோல் இந்தியா நிறுவன இயக்குநர் முகேஷ் சவுத்ரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்றனர்.
தமிழகத்திற்கென எதிர்பார்க்கப்படும் மின் தேவை, பழுப்பு நிலக்கரியின் இருப்பு, கோடை மற்றும் மழைக் காலங்களில் ஏற்படும் அதிகபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குறிப்பாக,வரும் கோடை வெயிலை சமாளிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மேலும், பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் நீக்கப்படும் மேல் மண்ணிலிருந்து எம்சாண்ட் எடுக்க தேவையான உதவிகள், பழுப்பு நிலக்கரி சுரங்கங்களுக்கான நிலங்களை கையகப்படுத்துதல், நெய்வேலி விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருதல் தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம், என்.எல்.சி., இந்தியா ஆகியன இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இதில், மத்திய அரசுக்கு, மாநில அரசு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு, மேற்கொண்ட முன் முயற்சிகள் மின் வினியோக சவால்களை கனிசமாக குறைத்து, தமிழ்நாடு மாநிலத்திற்கு நிலையான மின்சாரத்தை வழங்கும் என்பதை உறுதி செய்வதாகவும், என்.எல்.சி., நிறுவனம் தமிழகத்திற்கு தேவையான மின் தேவைகளை நிவர்த்தி செய்யும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.