/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ள நீர் வடிய வாய்க்கால் வெட்டுவதில் பிரச்னை 2 ஊர் மக்கள் மோதல் சூழல் உருவானதால் பதற்றம்
/
வெள்ள நீர் வடிய வாய்க்கால் வெட்டுவதில் பிரச்னை 2 ஊர் மக்கள் மோதல் சூழல் உருவானதால் பதற்றம்
வெள்ள நீர் வடிய வாய்க்கால் வெட்டுவதில் பிரச்னை 2 ஊர் மக்கள் மோதல் சூழல் உருவானதால் பதற்றம்
வெள்ள நீர் வடிய வாய்க்கால் வெட்டுவதில் பிரச்னை 2 ஊர் மக்கள் மோதல் சூழல் உருவானதால் பதற்றம்
ADDED : டிச 03, 2024 06:38 AM

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் அருகே வெள்ள நீர் வடியச் செய்ய வாய்க்கால் வெட்டும் பணியை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் 2 ஊர் மக்கள் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் பெண்ணையாற்றின் கரையோரம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வெள்ளப்பாக்கம் அருகே கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து 500க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
ஊருக்குள் புகுந்த தண்ணீர் வடிய வேண்டுமானால் மருதாடு சாலையில் உள்ள ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும். ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும்போது மருதாடு ஊர் எல்லையில் ஆற்றுக்கு செல்லும் சாலையின் குறுக்கே வாய்க்கால் வெட்டுவது வழக்கமாக உள்ளது.
அதேபோல் நேற்று காலை வெள்ளப்பாக்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பொக்லைன் இயந்திரத்தோடு காலை 9:00 மணியளவில் மருதாடு அருகே சாலையை வெட்ட துவங்கினர்.
இதையறிந்த மருதாட்டைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சாலையை வெட்டக்கூடாது என பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர். இதனால் 2 ஊர் மக்களும் மோதி கொள்ளும் நிலை ஏற்பட்டது.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சமரசம் செய்தனர்.
அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் மருதாட்டை சேர்ந்தவர்கள் போலீசாரை நெட்டி தள்ளியதால் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., ராஜாராம் பொதுமக்களை சமாதானம் செய்ததைத் தொடர்ந்து தண்ணீர் வடிய வாய்க்கால் வெட்டும் பணி நடந்தது.
ஆத்திரமடைந்த மருதாடு மக்கள் தங்கள் ஊரின் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என எஸ்.பி., கூறியதைத் தொடர்ந்து அனைவரும் 11:00 மணியளவில் கலைந்து சென்றனர்.