/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூக்கள் கருகியதால் முந்திரி விளைச்சல் பாதிப்பு! காப்பீடு திட்டத்தில் சேர்க்க கோரிக்கை
/
பூக்கள் கருகியதால் முந்திரி விளைச்சல் பாதிப்பு! காப்பீடு திட்டத்தில் சேர்க்க கோரிக்கை
பூக்கள் கருகியதால் முந்திரி விளைச்சல் பாதிப்பு! காப்பீடு திட்டத்தில் சேர்க்க கோரிக்கை
பூக்கள் கருகியதால் முந்திரி விளைச்சல் பாதிப்பு! காப்பீடு திட்டத்தில் சேர்க்க கோரிக்கை
ADDED : மே 03, 2024 05:44 AM

விருத்தாசலம் : மாவட்டத்தில் கடுமையான வெப்பம் காரணமாக, முந்திரி பூக்கள் கருகி விளைச்சல் பாதித்துள்ளதால், காப்பீடு திட்டத்தில் முந்திரி பயிரை இணைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் கடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உட்பட 73 ஆயிரத்து 100 ஏக்கரில், முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் பராமரிக்கப்படும் இப்பயிரை விவசாயிகள் பணப் பயிராக சாகுடி செய்கின்றனர். கடும் வறட்சியை தாங்கும் வலிமை கொண்ட முந்திரி, விவசாயிகளுக்கு உற்ற தோழனாக பராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. ஆறுகள், ஏரி, குளங்களில் நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போது, கடுமையான வெப்பம் காரணமாக முந்திரி மரங்களில் பூக்கள் கருகி உதிர்ந்து வருகிறது. இதனால் ஆண், பெண் பூக்கள் இணப்பெருக்கம் செய்ய முடியாமல், கருகி மகசூல் பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதில், விருத்தாசலம் வட்டாரத்தில், குப்பநத்தம் புறவழிச்சாலையோர முந்திரி தோப்புகளில் பாதித்துள்ள மரங்களை, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாஸ்கரன் தலைமையில் இணை பேராசிரியர்கள் சதீஷ் (தோட்டக்கலை), பாஸ்கரன் (தோட்டக்கலை), உதவி பேராசிரியர் ராஜபாஸ்கர் (பூச்சியியல் துறை) மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலைமணி, அலுவலர் சிவக்குமார், உதவி அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதில், பெரிய அளவில் பூச்சி மற்றும் நோய் பாதிப்பு இல்லை. தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தால் இருபால் பூக்களின் எண்ணிக்கை குறைந்து காய்பிடிப்பு பாதித்துள்ளது.
இதனால் மகசூல் பெருமளவு குறைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்பு பாசனம், தண்ணீர் தெளித்தல், நல்ல மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கினர்.
முந்திரி விவசாயிகள் குப்புசாமி, ஜெயகுரு உள்ளிட்டோர் கூறுகையில், 'காலநிலை மாற்றத்தால் முந்திரி பூக்கள் கருகியுள்ளன. கடும் வறட்சியை தாங்கும் முந்திரியே காய்ந்து போகும் அவலம் ஏற்பட்டு விட்டது. தண்ணீர் பற்றாக்குறைக்கு போர்வெல் அமைத்து சரி செய்து கொள்கிறோம். ஆனால், முழு சாகுபடியும் வீணாகி விட்டதால், மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் முந்திரி பயிரையும் இணைக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி, மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்ய வேண்டும்.
மேலும், கடலுார் மட்டுமல்லாது விழுப்புரம், அரியலுார், நாகை, புதுக்கோட்டை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் முந்திரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு மூட்டை முந்திரிக்கு ஒரு சவரன் தங்கம் வாங்கும் நிலை இருந்தது. ஆனால், இன்று தங்கத்தின் விலையையும், முந்திரியின் விலையையும் ஒப்பிட்டு பாருங்கள். பரிதாபமான நிலையில் வாழும் விவசாயியை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றனர்.