/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனித்தொகுதி அந்தஸ்து மாறவில்லையே கானல் நீராகும் எம்.எல்.ஏ., கனவு
/
தனித்தொகுதி அந்தஸ்து மாறவில்லையே கானல் நீராகும் எம்.எல்.ஏ., கனவு
தனித்தொகுதி அந்தஸ்து மாறவில்லையே கானல் நீராகும் எம்.எல்.ஏ., கனவு
தனித்தொகுதி அந்தஸ்து மாறவில்லையே கானல் நீராகும் எம்.எல்.ஏ., கனவு
ADDED : ஜூன் 18, 2025 05:05 AM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடியில் திட்டக்குடி (தனி) தொகுதி உள்ளது. சுதந்திர இந்தியாவில் 1951ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய 5 தொகுதிகள் மட்டுமே இருந்தன.
தற்போதைய திட்டக்குடி தனி தொகுதிக்குட்பட்ட பகுதி முதல் பொதுத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் இருந்தது. அடுத்து 1957ம் ஆண்டு நடந்த இரண்டாம் பொதுத் தேர்தலுக்கு முன் நடந்த தொகுதி மறு சீரமைப்பில் 6வது தொகுதியாக நல்லுார் உருவானது.
1957 மற்றும் 1962ம் ஆண்டு தேர்தலை மட்டுமே சந்தித்த நல்லுார் தொகுதி பின்னர் நடந்த மறுசீரமைப்பில் மங்களூர் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. 1967 தேர்தல் முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த 10 பொதுத் தேர்தலை சந்தித்த மங்களூர் (தனி) தொகுதி கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் மறு சீரமைப்பில் சிறு மாற்றத்துடன் திட்டக்குடி (தனி) தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது.
இதுவரை நடந்த 15 சட்டசபை தேர்தலில் 1957ல் நடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட வேதமாணிக்கம், 1962ல் நடந்த தேர்தலில் காங்., நாராயணசாமி, 1967ல் தி.மு.க., கிருஷ்ணன், 1971ல் தி.மு.க., ஜெபமாலை, 1977ல் அ.தி.மு.க., பெரியசாமி, 1980ல் அ.தி.மு.க., கலியமூர்த்தி, 1984ல் அ.தி.மு.க., தங்கராஜூ, 1989ல் தி.மு.க., கணேசன், 1991ல் காங்., புரட்சிமணி, 1996ல் த.மா.கா., புரட்சிமணி வெற்றி பெற்றனர்.
2001ல் தி.மு.க., திருமாவளவன், 2006ல் வி.சி.,செல்வப்பெருந்தகை, 2011ல் தே.மு.தி.க., தமிழழகன், 2016ல் தி.மு.க., கணேசன், 2021ல் தி.மு.க., கணேசன் வெற்றி பெற்றனர். 2004ல் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் தனது பதவியை ராஜினாமா செய்த பின் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., கணேசன் வெற்றி பெற்றார். தி.மு.க., கூட்டணி 7 முறையும், அ.தி.மு.க., கூட்டணி 6 முறையும், காங்., ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 57ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொகுதி தனி தொகுதியாகவே இருப்பதால் ஆதிதிராவிடர்கள் மட்டுமே போட்டியிடும் நிலை உள்ளது. அதனால், இத்தொகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எம்.எல்.ஏ., கனவு கானல் நீராகவே உள்ளது.
திட்டக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் 2006ல் சிதம்பரத்திலும், 2021ல் புவனகிரியிலும் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரைத்தவிர வேறு யாருக்கும், முக்கிய கட்சிகளில் வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை.
இதனால் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அருகில் உள்ள விருத்தாசலம் தொகுதி, பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதி போன்றவற்றில் போட்டியிட கடும் முயற்சி செய்து வருகின்றனர்.