/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முடிந்த கச்சேரிக்கு மேளம் வாசிப்பு விருதை ஒன்றிய கமிஷன் கூத்து
/
முடிந்த கச்சேரிக்கு மேளம் வாசிப்பு விருதை ஒன்றிய கமிஷன் கூத்து
முடிந்த கச்சேரிக்கு மேளம் வாசிப்பு விருதை ஒன்றிய கமிஷன் கூத்து
முடிந்த கச்சேரிக்கு மேளம் வாசிப்பு விருதை ஒன்றிய கமிஷன் கூத்து
ADDED : மார் 19, 2025 04:57 AM
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்கள் வாயிலாக சாலை, குடிநீர், வடிகால், புதிய கட்டடங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடந்தன. இப்பணிகளுக்கு வழக்கம்போல ஒன்றிய அதிகாரிகளுக்கு கமிஷன் தரப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி துவக்கத்தில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து, பி.டி.ஓ.,க்கள் வசம் நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே முடிந்த பணிகளுக்கும் தற்போது, புதிதாக கமிஷன் தர வேண்டும் என ஒன்றிய பொறியாளர், ஓவர்சீயர் உள்ளிட்டோர் அழுத்தம் தருகின்றனர்.
கமிஷன் வராத பணிகளுக்கு கையெழுத்து போட மறுப்பதுடன், பல்வேறு புகார்களை கூறி திருப்பி அனுப்பி வைக்கின்றனர். ஏற்கனவே கமிஷன் கொடுத்துள்ள நிலையில், மீண்டும் எப்படி கமிஷன் தர முடியும் என மாஜி பஞ்., தலைவர்கள், ஒப்பந்ததாரர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.
இதனால், சமீபத்தில் பணி மாறுதலாகி வந்த பி.டி.ஓ.,க்களிடம் நடவடிக்கை எடுக்குமாறு புலம்பி வருகின்றனர். ஒன்றிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதா அல்லது கமிஷன் கேட்டு வரும் புகார்களை விசாரித்து தீர்வு காண்பதா என தெரியாமல் புதிதாக பொறுப்பேற்ற பி.டி.ஓ.,க்கள் குழம்பியுள்ளனர்.
குறிப்பாக, விருத்தாசலம் தெற்கு ஒன்றியத்தில், க.இளமங்கலம், சாத்துக்கூடல் உள்ளிட்ட ஊராட்சியில் ஏற்கனவே முடிந்த பணிகளுக்கு, புதிதாக கமிஷன் கேட்டு, அதற்குரியை தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். கமிஷன் கொடுத்தால், ஒரு வாரத்தில் நிலுவையின்றி நிதி வழங்கப்படும் என மிரட்டல் விடுக்கின்றனர்.
இது தொடர்பாக ஊராட்சிகள் உதவி இயக்குனர் முதல் கூடுதல் கலெக்டர் வரை புகார்கள் பறந்தும் நடவடிக்கை இல்லை எனஒப்பந்தாரர்கள் புலம்புகின்றனர். மேலும், பி.டி.ஓ.,க்கள் மாறுதலை போல, ஒன்றிய பொறியாளர்கள், ஓவர்சீயர்கள் அனைவரும் மாறுதல் செய்யப்பட்டால் மட்டுமே கமிஷன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
முடிந்த கச்சேரிக்கு மேளம் வாசிக்க சொல்வதா என பேச்சுவழக்கில் சொல்வதைபோல, ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் கமிஷன் கேட்டு தொல்லை கொடுக்கும் அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.