/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் இரு இடங்களில் வாக்காளராக உள்ளவர்கள் 1,87,718 பேர்: முறைப்படுத்த தாலுகா வாரியாக தேர்தல் துறை தீவிரம்
/
மாவட்டத்தில் இரு இடங்களில் வாக்காளராக உள்ளவர்கள் 1,87,718 பேர்: முறைப்படுத்த தாலுகா வாரியாக தேர்தல் துறை தீவிரம்
மாவட்டத்தில் இரு இடங்களில் வாக்காளராக உள்ளவர்கள் 1,87,718 பேர்: முறைப்படுத்த தாலுகா வாரியாக தேர்தல் துறை தீவிரம்
மாவட்டத்தில் இரு இடங்களில் வாக்காளராக உள்ளவர்கள் 1,87,718 பேர்: முறைப்படுத்த தாலுகா வாரியாக தேர்தல் துறை தீவிரம்
UPDATED : அக் 17, 2024 06:30 AM
ADDED : அக் 17, 2024 04:51 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், 9 சட்டசபை தொகுதிகளில், 1லட்சத்து 87 ஆயிரத்து 718 பேர், இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, தேர்தல் அடையாள அட்டை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், 9 சட்டசபை தொகுதிகள் மற்றும் இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. மொத்தம் 21 லட்சத்து 40 ஆயிரத்து 112 வாக்காளர்கள் உள்ளனர். இதில், திட்டக்குடி (தனி) தொகுதியில் 2 லட்சத்து 17ஆயிரத்து 979, விருத்தாசலம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 679, நெய்வேலி 2 லட்சத்து 3 ஆயிரத்து 149, பண்ருட்டி 2 லட்சத்து 49 ஆயிரத்து 581, கடலுார் 2 லட்சத்து 41 ஆயிரத்து 751, குறிஞ்சிப்பாடி 2 லட்சத்து 46 ஆயிரத்து 607, புவனகிரி 2 லட்சத்து 51 ஆயிரத்து 12, சிதம்பரம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 538, காட்டுமன்னார்கோவில் (தனி) 2 லட்சத்து 30 ஆயிரத்து 816 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்த முகாம் வரும் நவ., 9, 10 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில், விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பாக விண்ணப்பங்களை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளிக்கலாம். முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வரும் ஜன., மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருமுறை பதிவு எனப்படும், இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போர்களை தேர்தல் ஆணையம் கண்டறிந்து, நீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதுகுறித்து சட்டசபை தொகுதி வாரியாக ஆய்வு செய்ததில், மாவட்டத்தில் திட்டக்குடி (தனி) தொகுதியில் 20,136 வாக்காளர்கள், விருத்தாசலம் 22,056, நெய்வேலி 17,878, பண்ருட்டி 21,983, கடலுார் 22,214, குறிஞ்சிப்பாடி 23,527, புவனகிரி 21,506, சிதம்பரம் 20,698, காட்டுமன்னார்கோவில் (தனி) 17,720 பேர் என மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 718 பேர், இரு இடங்களில வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, அடையாள அட்டை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அதையடுத்து, அந்தந்த சட்டசபை தொகுதி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு மூலம் வாக்காளரின் இரு இடங்களில் பதிவை முறைப்படுத்தும் பணி துவங்கியுளளது. அதற்காக, சம்மந்தப்பட்ட நபருக்கு விரைவு தபால் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருமுறை பதிவு உள்ள நபர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களின் முகவரிக்கு, இந்த கடிதம் அனுப்பப்படுகிறது.
அதில், அவர்கள் இடம்பெற்றுள்ள இரண்டு முகவரியில் எந்த முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என, டிக் செய்து கையெழுத்து போட்டு, மீண்டும் அந்த கடிதத்தை தேர்தல் பிரிவிற்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாக்காளர்கள் தங்களுக்கு தெரியாமல், பட்டியலில் இருந்து பெயரை நீக்கிவிட்டார்கள் என கூறுவதற்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்படும். இதற்காக, தாலுகா அலுவலக தேர்வு பிரிவு அலுவலகங்களில் தபால் தயார் செய்து, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து, ஓரிரு நாட்களில் தபால்கள் அனுப்பப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.