கடலுார் மாவட்டத்தில் வன்னியர் ஓட்டுகளை கவர திருமா வியூகம்
கடலுார் மாவட்டத்தில் வன்னியர் ஓட்டுகளை கவர திருமா வியூகம்
ADDED : ஜன 28, 2026 06:55 AM
த மிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, தி.மு.க., அ.தி.மு.க., வினர் கூட்டணிக்கு, பகீரத முயற்சி செய்து வருகின்றனர்.
தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. அதேபோல் அ.தி.மு.க., கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் சேர்ந்துள்ளார்.
பா.ம.க., (ராமதாஸ் அணி) தே.மு.தி.க., ஆகியோர் நிலைப்பாடு தெரியவில்லை. த.வெ.க., விஜய் தனித்து களம் காண்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வி.சி., தலைவர் திருமாவளவன் தன் கட்சியில், சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் வீதம், 234 மாவட்ட செயலர்களை அறிவித்தார்.
இதில் கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம் தொகுதிக்கு தமிழ்வளவன், நெய்வேலி தொகுதிக்கு மருதமுத்து என, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இருவரை நியமித்தார்.
வி.சி., கட்சியில் கடந்த சட்டசபை தேர்தலில், திருப்போரூர் தொகுதியில் பாலாஜியும், நாகப்பட்டிணம் தொகுதியில் ஆளூர்ஷாநவாஸ் இருவரும், பொது தொகுதியில் நின்று வெற்றி பெற்றனர்.மேலும், அவர், வி.சி., கட்சி அனைத்து சமூகத்தினருக்கான கட்சி என தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில், அனைத்து சமுதாய ஓட்டுகளை பெற முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் தான், கடலுார் மாவட்டத்தில் இரண்டு வன்னியர்களுக்கு, மாவட்ட செயலர் பதவி அறிவித்து, இரு அணியாக உள்ள பா.ம.க., எதிர்ப்பு வாக்குகளை பெற, காய் நகர்த்தி வருவதாக, அரசியல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
