இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகள்; தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகள்; தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
ADDED : ஏப் 19, 2026 06:52 PM

விருத்தாசலம்: 'தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்து மக்களிடம் பா.ஜ., பலவீனப்பட்டு நிற்கிறது' என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
விருத்தாசலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில செயலாளர்கள் சேட் முகம்மது, காஜா மொய்தீன் பேசினர். கூட்டத்தில் மாவட்ட, கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் சிறுபான்மை சமுதாயத்தை அச்சுறுத்தி, அவர்கள் மீது வெறுப்பை உமிழும் தீய சக்திகள் தமிழகத்தில் வளர்வதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. தமிழகத்தை மதவாத சக்திகள் ஆள்வதோ, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கை செலுத்துவதோ பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும். இந்த தேர்தலில் மதவாத சக்திகளோடு நேரடியாக, மறைமுகமாக கூட்டணி வைத்தவர்களை மாபெரும் தோல்வியை மக்கள் பரிசளிக்க வேண்டும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா எனும் போர்வையில் கொண்டு வரப்பட்ட, தொகுதி மறுவரையறை மசோதா லோக்சபாவில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மோசடி பிரசாரம் செய்ய மோடி அரசு கொண்டு வந்த மசோதா மூலமாக மக்கள் மத்தியில் பா.ஜ., அரசு பலவீனப்பட்டு நிற்கிறது. தென் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டால், கடுமையாக எதிர்க்கப்படும்.
நாசிக்கில் இயங்கும் பிரபல நிறுவனத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அஷ்வின் சாய்னானி எனும் பெண் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்னையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகளை திட்டமிட்டு பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மற்ற சமூகங்களை விட பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இந்த சமுதாயத்திற்கு உரிமைகளை உறுதி செய்ய முந்தைய அரசுகள் கவனம் செலுத்தவில்லை.
எனவே, இனி வரும் அரசுகளாவது இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உண்மையான அக்கறை காட்டும் கட்சிகளுக்கே இஸ்லாமிய சமூகம், பெருவாரியாக ஓட்டுகளை அளிக்கும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம்.
5 மாநில தேர்தலில், தமிழகத்தில் பல அரசு அதிகாரிகளை மாற்றி, பறக்கும்படை சோதனை என்ற பெயரில், மக்களை துன்புறுத்தி அடாவடியாக தேர்தல் ஆணையம் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
