/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சில் 52 சவரன் நகை பறித்த வழக்கில் மூவர் கைது விருதையில் 4 பேருக்கு வலை
/
பஸ்சில் 52 சவரன் நகை பறித்த வழக்கில் மூவர் கைது விருதையில் 4 பேருக்கு வலை
பஸ்சில் 52 சவரன் நகை பறித்த வழக்கில் மூவர் கைது விருதையில் 4 பேருக்கு வலை
பஸ்சில் 52 சவரன் நகை பறித்த வழக்கில் மூவர் கைது விருதையில் 4 பேருக்கு வலை
ADDED : டிச 02, 2024 06:55 AM

விருத்தாசலம்: பஸ்சில் 52 சவரன் நகைகள் பறித்து சென்ற வழக்கில், நகைக்கடை பெண் ஊழியர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான நால்வரை தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ராஜவேல் வீதியில் செந்தில் ஜூவல்லரி உள்ளது. இந்த கடையிலிருந்து, கடந்த 28ம் தேதி, 52 சவரன் நகைகளை அங்கு பணிபுரியும் ஜான்பால், 45, என்பவர் பெண்ணாடத்தில் உள்ள கே.பி., ஹால்மார்க் சென்டரில் சீல் போட எடுத்துச் சென்றார்.
சீல் போட்ட நகைகளுடன் பெண்ணாடத்தில் இருந்து அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் வந்தபோது, அருகில் அமர்ந்திருந்த நபர், திடீரென ஜான்பாலிடம் இருந்த நகை பையை பறித்துக்கொண்டு இறங்கி ஓடினார். அவருடன் பயணித்த மற்றொரு நபரும் பஸ்சிலிருந்து இறங்கி ஓடி, தயாராக நின்றிருந்த மற்றொரு நபருடன் பைக்கில் தப்பினர். ஜான்பால் புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், குணபாலன், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, பாக்யராஜ், சங்கர் உள்ளிட்ட போலீசார் அடங்கிய மூன்று தனிப்படைகள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கியது.
அதில், நகைக்கடையில் பணிபுரியும் கார்குடல் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் மனைவி செவ்வந்தி, 26, கொடுத்த தகவலின் பேரில், ஜான்பால் பஸ்சில் எடுத்து வந்த நகைகளை கார்குடல் ராஜாமணி மகன் கலைவாணன், 29, விருத்தாசலம் பூந்தோட்டம் பழனி மகன் அருள்தாஸ், 28, ஆகியோர் பறித்துச் சென்றது தெரிந்தது.
இது தொடர்பாக, கலைவாணன், அருள்தாஸ், செவ்வந்தி ஆகிய மூவரையும் நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 47 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 ,பேர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர்கள் இருப்பிடம் தெரிந்த நிலையில், மொபைல் போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளனர். இதனால், ஓரிரு நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
நகை பறிப்பு சம்பவத்திற்கு, அதே கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர் சதித்திட்டம் தீட்டியது, விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் இதுவரை எந்த வழக்கும் இல்லை. தலைமறைவாக உள்ள நால்வர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதால், அவர்களை பிடித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.