ADDED : ஏப் 25, 2025 05:12 AM

சிதம்பரம்: பு.முட்லுார் ஜவகர் மெட்ரிக் பள்ளியில், தாத்தா பாட்டி தினம், சிறுசேமிப்பின் அவசியத்தை உணர்த்த உண்டியல் வழங்கும் விழா, பாரம்பரிய உணவுத் திருவிழா என, முப்பெரும் விழா நடந்தது.
வடலுார் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை தலைவர் கல்விராயர் தலைமை தாங்கினார். முதல்வர் சுமதி மதியழகன் வரவேற்றார். பள்ளி நிறுவனர் மதியழகன் முன்னிலை வகித்தார்.
300க்கும் மேற்பட்ட தாத்தா, பாட்டிகளுக்கு மழலைகள் பாத பூஜை செய்து ஆசி பெற்றனர். சிறுசேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, 500 மாணவர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டது. 300 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை காட்சிப்படுத்தி மரபு வழி உணவு வகைகளை மாணவர்கள் நினைவுப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு நுகர்வோர் கல்வி மற்றும் மேம்பாட்டு பவுண்டேஷன் தலைவர் அருள்செல்வம் , கடலுார் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், ராஜலட்சுமி சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
பள்ளி இயக்குனர் கார்த்திகேயன், ஆலோசகர் ஹாசினி, தஜ்மல் உசேன், பன்னீர்செல்வம், அப்துல் கலாம், இஸ்மாயில், தமிழ்வாணன் பங்கேற்றனர்.
ஆசிரியர் தசரதன் நன்றி கூறினார்.