மாவட்டத்தில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள்... திக்.. திக்..: வெல்லப்போவது யார் என்பது இன்று தெரிந்து விடும்
மாவட்டத்தில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள்... திக்.. திக்..: வெல்லப்போவது யார் என்பது இன்று தெரிந்து விடும்
UPDATED : மே 04, 2026 05:03 AM
ADDED : மே 03, 2026 11:40 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்க இருப்பதால் போட்டியிட்ட, 113 வேட்பாளர்களும், திக்.. திக்.. மனநிலையில் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை 2026 ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தல் ஏப்., 23ம் தேதி நடைபெறும் என தேர்தல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி ஆகிய 9 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் போக, அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உட்பட 113 பேர் களத்தில் இருந்தனர்.
ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், பதிவான ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பான முறையில் 'சீல்' வைக்கப்பட்டு கடலுார் மாவட்டத்தில், 4 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
கடலுார், குறிஞ்சிப்பாடி தொகுதிகள் கடலுார் பெரியார் கலைக்கல்லுாரியிலும், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகள் அண்ணா பல்லைக்கழகத்திலும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகள் சி.முட்லுார் கலைக்கல்லுாரியிலும், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக்கல்லுாரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பெட்டிகளுக்கு 24 மணி நேரமும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர 24 மணி நேரமும், சி.சி.டி.வி., காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஓட்டுப்பதிவு மையங்களில், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், அவ்வப்போது ஓட்டு எண்ணிக்கை மையங்களை பார்வையிட்டு வந்தனர். குறிப்பிட்ட சில வேட்பாளர்கள், தாங்கள் வெற்றி பெற வேண்டும் என, முக்கிய கோவில்களை வலம் வந்து சிறப்பு வழிபாட்டிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில், இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்க உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, 4 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2590 ஓட்டுப்பதிவு மையங்கள் உள்ளன.
இவை ஒவ்வொரு தொகுதியிலும் வேறுபடும். இவற்றின் எண்ணிக்கையை பொருத்து சுற்றுகள் மாறும். இன்று காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி துவங்குகிறது.
முதலில் தபால் ஓட்டு எண்ணும் பணி நடைபெறும். காலை 10:30 மணிக்கே, முன்னிலை விவரம் தெரியவரும்.
பெரும்செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ள வேட்பாளர்கள் கனவு பலிக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.
