/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திக்...திக்...திக்..! பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வலுவிழந்து வருவதால்... அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
திக்...திக்...திக்..! பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வலுவிழந்து வருவதால்... அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திக்...திக்...திக்..! பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வலுவிழந்து வருவதால்... அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திக்...திக்...திக்..! பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வலுவிழந்து வருவதால்... அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : நவ 02, 2024 06:14 AM

பெண்ணாடம்: பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் கான்கிரீட் விரிசல் மற்றும் இரும்பு பிளேட்டுகள் சேதமடைந்து,பாலம் வலுவிழந்து வருகிறது. மேலும், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம் - ராமநத்தம் பிரதான நெடுஞ்சாலையாக உள்ளது. இச்சாலையில் உள்ள பெ.பொன்னேரியில், விழுப்புரம் - திருச்சி ரயில் பாதையில் அடிக்கடி கேட் போடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 2010ல் ரூ. 23 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் பணி துவங்கி, 2016ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது பயன்பாட்டிற்கு வந்தது.
வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி, பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, பெ.பொன்னேரி, இறையூர் ஊராட்சிகள் சார்பில் மின்கட்டணம் செலுத்தப்பட்டது. ஓரிரு மாதங்கள் மட்டுமே கட்டணம் செலுத்திய நிலையில், அதிக கட்டணத்தால் பணம் செலுத்தவில்லை.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட மேம்பாலம் இருளில் மூழ்கி, விபத்துகள் ஏற்படுவதுடன், பாலத்தை பொது மக்கள் அச்சத்துடன் கடக்கும் நிலை இருந்து வருகிறது.
2021 சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கணேசன், ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள், பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம், பெண்ணாடம் நகராட்சி என பல வாக்குறுதிகளை வாரி வழங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பிறகு பெண்ணாடம் மக்களிடம் குறைகளை கேட்க வந்தார். அப்போது, மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியவில்லை என புகார் தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறை மற்றும் நல்லுார் ஒன்றிய அதிகாரிகளிடம் மின் விளக்குகளை சரிசெய்ய உத்தரவிட்டார். 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், வெளிச்சமின்றி மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் பாலத்தில் மின்விளக்குகள், சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., மற்றும் மா.கம்யூ., விவசாய சங்கங்கள், ரோட்டரி சங்கம் சார்பில் தனித்தனியே போராட்டம் நடத்த அறிவித்தது. சமாதான பேச்சு மட்டுமே மிஞ்சியது.
விருத்தாசலம், ஆர்.டி.ஓ., திட்டக்குடி தாசில்தார், போக்குவரத்துத்துறை, சிமென்ட், சர்க்கரை ஆலை அதிகாரிகள் பெயரளவில் மட்டுமே பாலம் பகுதிகளை பார்வையிட்டு சென்றனர். இதுவரை எவ்வித பணிகளும் துவங்கவில்லை.
இந்நிலையில், மேம்பாலம் பராமரிப்பின்றி கான்கிரீட் தரைத்தளத்தில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. கர்டர்களை இணைக்கும் இரும்பு பிளேட்டுகளும் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. மழை காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு பாலம் வலுவிழந்து வருவதால் இவ்வழியே சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க அச்சமடைகின்றனர்.
எனவே, பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்துள்ள பகுதிகளை அமைச்சர், மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.