கடலுார் பாரதி சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
கடலுார் பாரதி சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
ADDED : மே 13, 2026 06:19 AM
கடலுார்: கடலுார் பாரதி சாலையில் சிறிய பாலம் கட்டுமான பணிகள் நாளை துவங்க உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கடலுார் அண்ணா பாலம் அருகில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 22 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக பாரதி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நெடுஞ்சாலையின் இருபுறமும் குறுக்கே மழைநீர் செல்லும் வகை யில் புதிதாக சிறிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நாளை (14ம் தேதி) இரவு துவங்குகிறது.
இதன் காரணமாக கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நாளை இரவு முதல் ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப் படுகிறது.
சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வாகனங்கள் வழக்கம் போல் பாரதி சாலை வழியாக பஸ் நிலையம் செல்லலாம்.
மேற்கு பகுதியில் பணி முடிந்த பிறகு, பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் பாரதி சாலை வழியாக செல்லலாம்.
அதே வேளையில் கிழக்கு பகுதியில் கட்டுமான பணிகள் நடக்கும் போது, புதுச்சேரி, பண்ருட்டி, விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஜவான்ஸ்பவன் வழியாக திருப்பி விடப்படும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
