ADDED : மார் 30, 2026 07:39 PM

விருத்தாசலம்: தேர்தல் பிரசாரம் துவங்கியதால், விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
விருத்தாசலம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., பிரேமலதா, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., தமிழரசி, நாம் தமிழர் ஆனந்தி தண்டபாணி, த.வெ.க., விஜய் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சசிகலா அணியும், த.வா.க., வேட்பாளரும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். குறிப்பாக தனித்துப் போட்டியிடும் கட்சிகளின் வேட்பளர்களை விட, கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரத்தில் ஈடுபடுவோர் 50க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக செல்கின்றனர். இதனால் சாலை நெடுகிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.
அதுபோல், தலைவர்கள் பிரசாரத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கூடும்போது பிரதான ஜங்ஷன் சாலை, பாலக்கரை ரவுண்டானா, கடை வீதி நான்குமுனை சந்திப்பு, பஸ் நிலையம் ஆகிய பகுதிகள் ஸ்தம்பித்து விடும். இதனால் பிரசாரம் எப்போது முடியுமோ என பாதசாரிகள், வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர்.
