/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'சண்டே' வில் சரக்கு வேட்டை டிராபிக் போலீஸ் 'குஷி'
/
'சண்டே' வில் சரக்கு வேட்டை டிராபிக் போலீஸ் 'குஷி'
ADDED : ஜன 08, 2025 05:28 AM
கடலுார், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உட்பட புதுச்சேரிக்கு அருகிலுள்ள நகரங்களைச் சேர்ந்த மது பிரியர்கள், வாரவிடுமுறை நாளான ஞாயிற்று கிழமையன்று புதுச்சேரிக்கு படையெடுப்பது வழக்கம். அவ்வாறு செல்லும் சிலர் அங்கிருந்து பாட்டில்களை வாங்கி வருகின்றனர்.
இதை தடுக்க கடலுார், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவர். ஆனால், தினமும் கடத்தல் சரக்கு பிடிக்கும் கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் பெரும்பாலும் வழக்குகள் போடப்படுவதில்லை.
உயர் அதிகாரிகள் அங்கு வந்தால் மட்டுமே ஒப்புக்கென் ஒன்றிரண்டு வழக்குகள் பதிவாகிறது. அங்கு பிடிக்கும் சரக்குகள் மாயமாவதன் மர்மம் புரோக்கர்களுக்குத்தான் வெளிச்சம்.
அதே போன்று, கடந்த சில தினங்களுக்கு முன் பண்ருட்டி அருகே ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், வாகனங்களை சோதனை செய்து அதிலிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். வழக்கு போடாமல் இருக்க 5 ஆயிரம்,10 ஆயிரம் என பணமும் வசூலித்துள்ளனர்.
போக்குவரத்து போலீசாருக்கு, மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய அதிகாரம் இருக்கா என சட்டம் பேசியவர்களை, அப்படியே கலாலில் ஒப்படைத்துவிடுவோம் என மிரட்டி உள்ளனர். மேலும் அனைவரையும் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பி உள்ளனர்.
வெளியே தெரிந்தால் அசிங்கம் என பிடிபட்ட பலர் வெளியே சொல்லாமல் எஸ்கேப் ஆகினர். இதனால் டிராபிக் போலீசார், நுாற்றுக்கணக்கான பாட்டில்களை அள்ளிச்சென்றதோடு, வெய்ட்டா ஒரு தொகையையும் வசூலித்துவிட்டதாக ரெய்டில் சிக்கிய சிலர் புலம்பியபடி சென்றனர்.