ADDED : ஜூன் 08, 2026 05:38 AM

வடலுார்: ஏரிக்கரையில் குப்பைகள் எரிப்பால் பனை மரக்கன்றுகள் சேதமடைந்தன.
வடலுார் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள், நெடுஞ்சாலை ஓரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆங்காங்கே குப்பை எரிப்பது, தொடர்ந்து நடந்து வருகிறது.
குடியிருப்புகளில் துப்புரவு பணியாளர்கள் வீடுகளில் குப்பைகளை சேகரித்தாலும், அவர்களே குப்பைகளை எரிக்கும் நிலைமையும் நிலவி வருகிறது.
வடலுார், அய்யன் ஏரி கரையில் குப்பை கொட்டி எரிப்பது பல காலமாக நடந்து வந்தது. ஏரிக்கரை சீரமைப்புக்கு பின் ஓரளவு குறைந்த நிலையில், தற்போது அப்பகுதியில் மீண்டும் குப்பை எரிக்கும் பழக்கம் அங்கு அதிகரித்து வருகிறது. குப்பைகள் அங்கு எரிக்கப்பட்டு ஏரிக்கரையில் உள்ள பனை மரங்கள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது.
இதனால் காற்று மாசு ஏற்பட்டு வடலுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிப்போருக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
