/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதற்றமான ஓட்டுசாவடிகள் கண்டறியும் பணி துவக்கம்! கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை
/
பதற்றமான ஓட்டுசாவடிகள் கண்டறியும் பணி துவக்கம்! கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை
பதற்றமான ஓட்டுசாவடிகள் கண்டறியும் பணி துவக்கம்! கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை
பதற்றமான ஓட்டுசாவடிகள் கண்டறியும் பணி துவக்கம்! கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை
ADDED : மார் 06, 2024 03:03 AM
கடலுார் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மாநிலம் வாரியாக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பாக, தேர்தல் நேர்மையாக நடைபெற ஏதுவதாக அந்தந்த மாநில தேர்தல் ஆணையத்தால் காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.
கடலுார் மாவட்டத்தில், கடலுார், சிதம்பரம் என, 2 லோக்சபா தொகுதிகள் உள்ளது. மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில், கடலுார் லோக்சபா தொகுதியில் திட்டகுடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி என 6 தொகுதிகள் அடங்கும்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) , புவனகிரி மற்றும் அரியலுார் மாவட்டங்கள் அரியலுார், ஜெயங்கொண்டம், குன்னம் என 6 சட்டசபை தொகுதிகள் அடங்கும்.
மாவட்டம் முழுதும் 10,45,551 ஆண்கள், 10,77,438 பெண்கள், 287 திருநங்கைகள் என, மொத்தம் 21,23,276 பேர் வாக்காளர்களாக உள்ளனர். மாவட்டத்தில் 2,302 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா ஒரு மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஓட்டுச்சாவடி மையங்களில் கட்டடங்களின் உறுதி தன்மை, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேப் போன்று, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் எந்த ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை மற்றும் மிகவும் பதற்றமானவை என்பதை போலீசாருடன் இணைந்து கண்டறியும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
மண்டல அலுவலர்கள் அளிக்கும் அடிப்படையில் ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஓட்டு சதவீதம் குறைந்த ஓட்டுச்சாவடி மையங்களில் கூடுதல் ஓட்டுப் பதிவு நடைபெற ஓட்டுப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

