UPDATED : மே 01, 2026 07:20 PM
ADDED : மே 01, 2026 07:11 PM

காட்டுமன்னார்கோவில்: விவசாயி வீட்டு தோட்டத்தில் இருந்து, 3 கறவை மாடுகளை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த மானியம் ஆடூரை சேர்ந்த கணேசன் மகன் பாலமுருகன் 54; விவசாயி. இவர், 3 கறவை மாடுகள் வளர்த்து வந்தார்.
கடந்த, சில தினங்களுக்கு முன்பு, வழக்கம் போல் மாடுகளை மேய்த்து விட்டு, இரவு தனது வீட்டின் பின் பக்கம் தோட்டத்தில் கட்டினார். அடுத்தநாள் காலையில் சென்று பார்த்த போது கட்டியிருந்த, 3 மாடுகளும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த மாடுகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் புத்துார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் காட்டுமன்னார்கோவில் அடுத்த நெய்வாசலை சேர்ந்த திராவிடமணி மகன் சத்யராஜ் 39; அவரது நண்பர் பண்ருட்டியை சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் மகன் திருஞானசம்பந்தம் 29; ஆகிய இருவரும் மாடுகளை திருடி விற்றது தெரிந்தது.
திருச்சின்னபுரம் சுடுகாடு அருகே பதுங்கியிருந்த இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் திருடிய மாடுகளை பறிமுதல் செய்து விவசாயி பாலமுருகனிடம் ஒப்படைத்தனர்.
