/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை ஆசாமி திருடி சென்ற கார் மோதி 2 பேர் படுகாயம்
/
போதை ஆசாமி திருடி சென்ற கார் மோதி 2 பேர் படுகாயம்
ADDED : ஏப் 16, 2025 09:32 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் காரை திருடிச் சென்ற போதை ஆசாமி, பைக்கில் சென்ற இருவர் மீது மோதிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையை சேர்ந்தவர் முகமது அன்சர் அலி,31; இவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு, விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு, தனது உறவினரை பஸ் ஏற்றிவிட தனது டாடா இன்டிகா காரில் வந்தார். காரில் சாவியை வைத்து விட்டு உறவினரை பஸ் ஏற்றி விட சென்றார். இதனை நோட்டமிட்ட, போதை ஆசாமி ஒருவர், காரை திருடிக்கொண்டு, விருத்தாசலம்-பாலக்கரை வழியாக அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றார்.
அப்போது, பாலக்கரை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த சென்னை பாரதி நகரைச் சேர்ந்த நந்தகோபால், 42; மணவாளநல்லுார் முருகவேல்,45; ஆகியோர் மீது மோதினார். இதனால் தறிகெட்டு ஓடிய கார், மின் கம்பத்தில் மோதி நின்றது.
விபத்தில் பைக்கில் சென்ற நந்தகோபாலுக்கு கால் முறிவு மற்றும் முருகவேலிற்கு தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்,46; என்பதும், புதுச்சேரியில் ஆட்டோ டிரைவராக உள்ளதும் தெரிய வந்தது.
போதை தலைக்கேறியதால், பஸ் நிலையத்தில் நின்ற காரை திருடிச் சென்று விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர். இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளதா என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

