ADDED : மார் 30, 2026 11:25 PM

கடலுார்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் முதல் நாளான நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். விருத்தாசலத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்தி தண்டபாணி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த பின்பு, பாலக்கரையில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் மாட்டு வண்டியில் பறை இசைத்தபடி ஊர்வலமாக சென்ற வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ் எழுத்துக்கள் அச்சிட்ட புடவை அணிந்து சென்றார் என்பது குறிப்பிடதக்கது.
அதேபோல், சிதம்பரம் தொகுதி நா.த.க., வேட்பாளர் தமிழ் ஏர் கலப்பையுடன், மேளதாளங்கள் முழங்க தெற்கு வீதியில் இருந்து ஊர்வலமாக சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் கிஷன்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திட்டக்குடி தொகுதியில் நா.த.க., வேட்பாளர் சிறுபாக்கம் அடுத்த கீழ்ஒரத்துார் மகாலட்சுமி, புவனகிரி தொகுதி வேட்பாளர் சுமதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். பண்ருட்டி தொகுதி வேட்பாளர் பானுபிரியா மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் கமலத்திடம் மனு தாக்கல் செய்தாா்.
