/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
யூரியா விலையேற்றம்: விவசாயிகள் அவதி
/
யூரியா விலையேற்றம்: விவசாயிகள் அவதி
ADDED : அக் 27, 2025 11:36 PM
புவனகிரி: புவனகிரி மற்றும் கீரப்பாளையம் சுற்றுபகுதியில் யூரியா தட்டுப்பாட்டினால், மழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூடுதல் விலைக்கு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றியப்பகுதி கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பு பெய்த மழையில் முறையான வடிகால் வசதி இல்லாமல், பாசன வாய்க்கால்கள் துார்ந்து கிடந்ததால், தண்ணீர் வடியாமல் வயல்களில் தேங்கியது.
இதனால் புவனகிரி ஒன்றியத்தில் உளுத்துார், அம்பாள்புரம், பிரசன்னராபுரம் உள்ளிட்ட சுற்றுபகுதியில் 200 ஏக்கருக்கும் மேல் நடவுப்பயிர்கள் அழுகியது. தீபாவளி தினத்தில் இருந்து பெய்த மழையில் கீரப்பாளையம் சுற்று பகுதி கிராமங்கள் மற்றும் புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த வண்டுராயன்பட்டு, பு. உடையூர், ஆலம்பாடி, மருதூர், கிருஷ்ணாபுரம், பூதவராயன் பேட்டை,கிராமங்களில் உள்ள வயல்களில் சம்பா விதை நேர்த்தியும், சில பகுதியில் நடவுப்பணியும் மேற்கொண்ட நிலையில், வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் பாதித்தனர்.
பாதிக்கப்பட்ட பயிரை காப்பாற்றிட யூரியா போதுமான அளவில் கிடைக்காததால், யூரியா மூட்டை ஒன்று ரூ.350முதல் ரூ.370 வரை தனியார் கடைகளில் வாங்க வேண்டியுள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கூடுதல் விலை விற் பனை குறித்த வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் கூறுகின்றனர்.
விவசாயிகளுக்கு, நியாயமான விலையில் உரம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கின்றனர்.

