/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காய்கறி தள்ளுவண்டிகள் அரசு பஸ் மோதி சேதம்
/
காய்கறி தள்ளுவண்டிகள் அரசு பஸ் மோதி சேதம்
ADDED : ஜூன் 28, 2025 12:34 AM

திட்டக்குடி : திட்டக்குடியில் அரசு டவுன் பஸ் எதிர்பாராத விதமாக காய்கறிகள் விற்கும் தள்ளுவண்டிகள் மீது மோதியதில் ஒரு பெண் காயமடைந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
திட்டக்குடி அரசு பணிமனைக்கு சொந்தமான டி.என். 32 - என். 3502 பதிவெண் கொண்ட அரசு டவுன் பஸ் (தடம் எண் - 7) நேற்று மாலை 4:30 மணிக்கு அரியலுார் மாவட்டம், இடையக்குறிச்சியில் இருந்து திட்டக்குடி பஸ் ஸ்டாண்டு நோக்கி வந்து கொண்டிருந்தது.
பஸ்சை டிரைவர் ராஜேந்திரன் ஓட்டினார். கண்டக்டர் பிரபு பணியில் இருந்தார். பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் உள்ளே வந்து திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அங்கு தள்ளுவண்டிகளில் காய்கறிகள் விற்பனை செய்யும் பகுதிக்குள் புகுந்தது.
சத்தம் கேட்டு திடுக்கிட்ட வியாபாரிகள், பொது மக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது. விபத்தில் திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி அருள் மனைவி தீபா, 36; என்பவர் காயமடைந்தார். 5 தள்ளுவண்டிகள் சேதமானது.திட்டக்குடி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.