/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகரில் விதிமீறலால் வாகன விபத்துகள்... அதிகரிப்பு; ஒரே வாரத்தில் 3 விபத்துகளில் 7 பேர் பலி
/
மாநகரில் விதிமீறலால் வாகன விபத்துகள்... அதிகரிப்பு; ஒரே வாரத்தில் 3 விபத்துகளில் 7 பேர் பலி
மாநகரில் விதிமீறலால் வாகன விபத்துகள்... அதிகரிப்பு; ஒரே வாரத்தில் 3 விபத்துகளில் 7 பேர் பலி
மாநகரில் விதிமீறலால் வாகன விபத்துகள்... அதிகரிப்பு; ஒரே வாரத்தில் 3 விபத்துகளில் 7 பேர் பலி
ADDED : நவ 07, 2025 12:43 AM

கடலுார்: கடலுார் மாநகரில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரே வாரத்தில் 3 விபத்துகளில் 7 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகரித்து வரும் வாகன விபத்துக்களுக்கு, வாகனங்களின் எண்ணிக்கை கூடுதல், போக்குவரத்து விதிமீறல்கள், சாலைகள் குறுகலாக இருப்பது, மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.
குறிப்பாக, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது, அதிவேகம், மற்றும் போதிய பயிற்சி இல்லாதது, எதிர்திசையில் வாகனம் ஓட்டுவது போன்றவை விபத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், சாலை விபத்துகள் மற்றும் அது தொடர்பான உயிரிழப்புகள் தொடர்பாக மத்திய அரசு கடந்த 2023 ம் ஆண்டு ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டது.
அதில், அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 67 ஆயிரத்து 213 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதே போல, சாலை விபத்துகளில் அதிக உயரிழப்பு ஏற்படும் மாநிலமாக தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது. இதில், கடந்த 2023 ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 18 ஆயிரத்து 347 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல, இதற்கு முன்பு 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024 ம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்து சிறிதளவு குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 67 ஆயிரத்து 153 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 18 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் விழுப்புரம்-நாகப்பட்டினம், கடலுார்-விருத்தாசலம் கட்டண சாலைகளில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலைகளில் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் வெவ்வேறு சாலைகளில் விதிமீறல் காரணமாக 7 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 4ம் தேதி கடலுார் அடுத்த அன்னவல்லியைச் சேர்ந்தவர்கள் வடிவேல்,45; பாஸ்கர்,47; பெரியகாட்டுசாகையைச் சேர்ந்தவர் ஜெயராஜ்,45; மூவரும் கொத்தனார். இவர்கள் மூவரும் மாலை 5:00 மணிக்கு வேலை முடிந்து, அன்னவல்லி பஸ் நிறுத்தம் அருகில் சம்பள தொகையை பிரித்துக் கொண்டிருந்தனர். ஓட்டல் கடைகாரர் மோகன்,60; உடனிருந்தார்.
அப்போது, விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்த மாருதி சுசூகி கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த வடிவேல், ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள், சம்பவ இடத்தில் திரண்டு விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த ஆவினங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போதையில் இருந்ததால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலுாரில் கடந்த முதல் தேதியன்று வேன்-மொபட் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, தாய், மகன் இறந்தனர். முதுநகர் அடுத்த கொடிகால்குப்பத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி, 54; இவரது மனைவி ராமாயி,50; மகன் ராஜேஷ்குமார்,30; மூவரும் கடலுாரில் இருந்து நெல்லிக்குப்பத்திற்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்க மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை ராஜேஷ்குமார் ஓட்டினார்.
கடலுார், கோண்டூர் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, எதிரில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த வேன் திடீரென, மொபட் மீது நேருக்கு நேர் மோதியது. விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த பக்கிரிசாமி, ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
நெய்வேலி அடுத்த வேலு டையான் நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியஸ்டான்லி,32. கடலுாரிலுள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று கா லை தனது யமஹா பைக்கில், அவருடன் வேலை பார்க்கும் விஜயகுமார்,29, உடன் செம்மண்டலத்திலிருந்து கம்மியம்பேட்டை பை பாஸ் சாலையில் ஜவா ன்ஸ் பவன் நோக்கி சென்றார்.
பைக்கை விஜயகுமார் ஓட்டினார். முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி பைக்குடன் நேருக்கு நேர் மோதியதில் விஜயகுமார் அதே இடத்தில் இறந்தார். தலையில் பலத்த காயமடைந்த ஆரோக்கிய ஸ்டான்லி, சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதில் இருசக்கர வாகனத்தில் ெஹல்மட் இல்லாமல் சென்ற 5 பேர் பலியாகி உள்ளனர். ஹெல்மட் அணிந்திருந்தால் ஓரளவுக்காவது உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.

