/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலை பணி மீண்டும்... துவக்கம்: 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
/
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலை பணி மீண்டும்... துவக்கம்: 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலை பணி மீண்டும்... துவக்கம்: 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலை பணி மீண்டும்... துவக்கம்: 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
ADDED : டிச 16, 2025 05:19 AM

கடலுார்: விக்கிரவாண்டி - தஞ்சாவூர் 4 வழி சாலையில் மூன்றாம் கட்டப்பணிகள் மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் பணியை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் இரண்டு வழிச்சாலைகள் படிப்படியாக நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றான சென்னையை தஞ்சாவூருடன் இணைக்கும் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையும் நான்கு வழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இச்சாலையில் தஞ்சாவூர் - சோழபுரம், சோழபுரம் - சேத்தியாதோப்பு, சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி என 3 பகுதியாக பிரித்து சாலை விரிவாக்க பணி வழங்கப்பட்டது.
இந்த தேசிய நெடுஞ்சாலை, கடந்த 2017ம் ஆண்டு, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கின. இந்த திட்டம் 2020ம் ஆண்டே முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால் கஜா புயல், கொரோனா பெருந்தொற்று ஆகிய இயற்கை இடர்பாடுகள், நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளால் கால தாமதம் ஆனது. அதன்பிறகு படிப்படியாக பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்நிலையில் முதல் இரண்டு கட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டன. தஞ்சாவூர் - சோழபுரம் பகுதி 4 வழிச்சாலை கடந்த ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. சோழபுரம் - சேத்தியாதோப்பு இடையிலான 4 வழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இது 50 கிலோ மீட்டர் துாரம் கொண்டது. இந்த சாலையில் பைபாஸ் சாலைகள், மிகப்பெரிய பாலங்கள் என 2,357 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்துள்ளன.
தற்போது விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு 4 வழிச்சாலை திட்டம் மட்டும் முடிக்கப்படாமல் உள்ளன. பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இதற்கிடையே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மேற்கொண்ட ஆய் விற்கு பின் சாலைப் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல விக்கிர வாண்டி- சேத்தியாத்தோப்பு வரையிலான (என்.எச்.45சி) 66 கி.மீ. நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை 848 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்திட டெண்டர் விடப்பட்டது. நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு தேசிய நெடுஞ்சாலை தற்போது வடலுார் அருகே சாலைப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து செய்தி தொடர்பாளர் சதீஷ் கூறியதாவது: விக்கிரவாண்டி- சேத்தியாதோப்பு வரையிலான (என்.எச்.45சி) 66 கி.மீ. நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் முழு வீச்சுப் பணிகள் செய்ய முடியாது. அதற்காக சாலைப்பணிகளும் செய்யாமல் இருக்க முடியாது. முடிந்த வரை பணிகளை விரைவாக முடிக்க முயற்சி செய்து வருகிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாம் கட்ட பணிகள் நிறைவு பெற்று முழு 4 வழிச்சாலையும் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறினார்.
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் 4 வழிச்சாலை திட்டம் முடிவடைந்து விட்டால் டெல்டா பகுதிக்கு பெரிதும் வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விழுப்புரம், கடலுார், அரியலுார், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.

