செம்பேரி - தெத்தேரி இடையே பாலம்: இரு மாவட்ட கிராம மக்கள் கோரிக்கை
செம்பேரி - தெத்தேரி இடையே பாலம்: இரு மாவட்ட கிராம மக்கள் கோரிக்கை
UPDATED : ஜூலை 26, 2026 05:26 PM
ADDED : ஜூலை 26, 2026 04:11 PM

பெண்ணாடம்:செம்பேரி - தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க இருமாவட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த செம்பேரி - தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக மண் சாலையை பயன்படுத்தி, அரியலுார், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலுார், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை மற்றும் கோடை மழையின்போது தொழுதுார் அணைக்கட்டு, சின்னாறு, ஆனைவாரி மற்றும் உப்பு ஓடைகளில் இருந்து வரும் மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
அப்போது, தற்காலிக மண் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கும். இதனால் இருமாவட்ட மக்களும் 10 மற்றும் 15 கி.மீ., சுற்றி கோட்டைக்காடு, முருகன்குடி, பெ.பொன்னேரி மேம்பாலம் வழியாக வெளியூர் செல்ல வேண்டி உள்ளது. இச்சாலையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என இருமாவட்ட மக்களுக்கு அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள், முதியோர்கள், பெண்கள் பாதிப்படைவது தொடர்கிறது.
எனவே, செம்பேரி - தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க இருமாவட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
