/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனி ஊராட்சி கோரி கிராம மக்கள் முற்றுகை
/
தனி ஊராட்சி கோரி கிராம மக்கள் முற்றுகை
ADDED : பிப் 01, 2024 06:03 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த முதனை ஊராட்சி பழைய விருத்தகிரிகுப்பம் கிராம மக்கள், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
அப்போது, கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட முதனை ஊராட்சியில் முதனை, முதனை காலனி, பழைய விருத்தகிரிக்குப்பம், புது விருத்தகிரிக்குப்பம், எடக்குப்பம் ஞானியார் தெரு, வீரட்டிக்குப்பம் தெற்கு தெரு ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 7 ஆயிரம் வாக்காளர்கள் முதனை ஊராட்சியில் உள்ளனர்.
கடந்த 40 ஆண்டுக்கு மேலாக எங்கள் ஊருக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் சரிவர செய்து தரப்படவில்லை.
ஒவ்வொரு முறையும் நாங்கள் போராடியே எங்களது தேவைகளை பெற வேண்டிய நிலை உள்ளது. இதுவரை தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்கள் அனைவரும் முதனை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் கிராமத்தை புறக்கணிக்கின்றனர்.
எனவே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள பழைய விருத்தகிரிகுப்பத்தை, முதனை ஊராட்சியில் இருந்து பிரித்து, தனி ஊராட்சி அமைத்து தர வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இன்பா பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.