ADDED : நவ 23, 2026 08:52 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் நடக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வருபவர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால் அவரை மாற்ற வலியுறுத்தி, இன்று (நவ.,23) கிராம மக்கள், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம், பி.டி.ஓ., லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்கள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பி.டி.ஓ., உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால், ஊராட்சி ஓன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
