UPDATED : நவ 17, 2026 05:12 PM
ADDED : நவ 17, 2026 05:10 PM

திட்டக்குடி: திட்டக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் எரிந்து கிடந்ததால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திட்டக்குடி சட்டசபை தொகுதியில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
புதிய வாக்காளர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பித்து வருவதுடன், பிழை திருத்தம் செய்யவும் மனுக்கள் அளித்து வருகின்றனர்.
கடந்த, சட்டசபை, லோக்சபா தேர்தலின் போது புதிய வாக்காளர் அட்டை கேட்டு விண்ணப்பித்த பலருக்கு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும் வாக்காளர் அடையாள அட்டைகள் வரவில்லை.
இந்நிலையில் கட்நத சில தினங்களுக்கு முன், தாலுகா அலுவலக வளாகத்தில் குப்பையில் வீசப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை எரிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குப்பையில் வாக்காளர் அடையாள அட்டை எரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
