/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் - கும்பகோணம் புதிய ரயில் பாதை
/
விருத்தாசலம் - கும்பகோணம் புதிய ரயில் பாதை
ADDED : பிப் 24, 2024 06:21 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் - கும்பகோணம் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள், நிறைவேறுமா என எட்டு மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை - திருச்சி மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் மற்றும் சரக்கு ரயில்கள் என தினசரி ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என ஆயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர்.
மேலும், தென்மாவட்ட ரயில்கள் இவ்வழியாக நேரடியாக செல்வதால், கடலுார், பெரம்பலுார், அரியலுார், சேலம் மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோவில் நகராக விளங்குகிறது. இங்கு, ராகு, கேது உட்பட நவக்கிரகங்களுக்கு பரிகார தலங்கள் உள்ளன.
அதுபோல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகப் பெருவிழாவிற்கு, நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
கடலுார், சேலம், அரியலுார், பெரம்பலுார் மாவட்ட மக்கள் கும்பகோணம் செல்ல வேண்டுமானால், திருச்சி மார்க்க ரயில்களில் அரியலுார் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஜெயங்கொண்டம், தா.பழூர், கும்பகோணம் அல்லது அரியலுாரில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம் என பஸ் மார்க்கமாக செல்கின்றனர்.
மேலும், திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர், கும்பகோணம் ரயிலில் செல்லலாம்.
நேரடி ரயில் வசதியில்லாமல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள், விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம், தா.பழூர் வழியாகவும், அணைக்கரை கொள்ளிடம் பாலம் வழியாகவும் மூன்று பஸ்கள் மாறி, 4 மணி நேரம் பயணம் செய்து, கும்பகோணம் செல்கின்றனர்.
இந்நிலையில், விருத்தாசலம் - கும்பகோணம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதில், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வழியாக 65 கி.மீ., தொலைவிற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்.
2016ம் ஆண்டில் நடந்த கும்பகோணம் மகாமகப் பெருவிழாவிற்கு முன்னதாக புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த திட்டம் தொடர்பாக, அப்போதைய முதல்வர் ஜெ.,விடம் ஆலோசிப்பதாக அப்போதைய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்திருந்தார்.
இதேபோல், காங்., மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்த முனியப்பா, கும்பகோணம் ரயில் நிலையம் வழியாக திருநள்ளாறு சென்றபோது, விருத்தாசலம் - கும்பகோணம் ரயில் பாதை திட்டம் ஆய்வுக்கு எடுக்கப்படும் என உறுதியளித்து சென்றிருந்தார்.
ஆனால், மகாமகப் பெருவிழா முடிந்து எட்டு ஆண்டுகளாகியும், விருத்தாசலம் - கும்பகோணம் ரயில் பாதை திட்டம் ஆய்வுக்கு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், கடலுார், விழுப்புரம், சேலம், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட எட்டு மாவட்ட மக்களின், புதிய ரயில் பாதை திட்டம் கேள்விக்குறியானது.
பா.ஜ., ஆட்சியமைத்த பின், தமிழக எம்.பி.,க்கள் யாரும் குரல் கொடுக்காமல் விட்டதால், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை என பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, கோவில் நகரான கும்பகோணத்திற்கு நேரடியாக சென்று வர விருத்தாசலம் - கும்பகோணம் புதிய ரயில் பாதை திட்டத்தை ஆய்வு செய்து, செயல்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கூடுதல் வருவாய்க்கு வழி
விருத்தாசலம் - ஜெயங்கொணம் வழியாக கும்பகோணத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள், பஸ்களில் பயணித்து வருகின்றனர். இந்த தடத்தில் ரயில் பாதை அமைத்தால், ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோல், சரக்கு ரயில்கள் மூலம் டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் உள்ளிட்ட தானியங்களை எளிதில் கொண்டு வர முடியும்.
தற்போது, சென்னையில் இருந்து விழுப்புரம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட ரயில்கள் மட்டுமே செல்கின்றன.
விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணத்திற்கு புதிய பாதை அமைத்தால், டெல்டா மக்களுக்கு அதிக ரயில் வசதி கிடைக்கும். பயண நேரம் குறைவதுடன், ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.