/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டனில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
/
வெலிங்டனில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ADDED : டிச 15, 2024 07:49 AM

திட்டக்குடி : கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் வெலிங்டன் நீர்த்தேக்கம் உள்ளது. தொடர் கனமழை காரணமாக மொத்த நீர்பிடிப்பு அளவான 29.72 அடியில் 27.00 அடி நிரம்பியுள்ளது (2,580 மில்லியன் கனஅடி கொள்ளளவில் 1,890 மில்லியன் கனஅடி நிரம்பியுள்ளது).
இதையடுத்து, நடப்பாண்டு விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். ஆர்.டி.ஓ., சையத் மஹ்மூத், தாசில்தார் அந்தோணிராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பாசன வாய்க்கால் மூலம் வினாடிக்கு 120 கனஅடி வீதம், 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் தாலுகாவுக்குட்பட்ட 23 பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன ஏரிகள், 63 கிராமங்களில் உள்ள கீழ்மட்ட கால்வாய் மூலம் 6,767 ஏக்கர் நிலமும்; மேல்மட்ட கால்வாய் மூலம் 17,292 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 59 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் கணேசன் கூறுகையில், 'வெலிங்டன் நீர்த்தேக்கம் உருவாகி நூறு ஆண்டுகளுக்கு மேலாகிறது. வெலிங்டன் நீர்த்தேக்கம் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க வேண்டும்' என தெரிவித்தார்.