ஆன் லைனில் பத்திரங்கள் பதிவு செய்யும் முறைக்கு... வரவேற்பு:இதுவரை 300க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின
ஆன் லைனில் பத்திரங்கள் பதிவு செய்யும் முறைக்கு... வரவேற்பு:இதுவரை 300க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின
UPDATED : செப் 14, 2026 05:30 AM
ADDED : செப் 13, 2026 05:22 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ஆன்-லைனில் கிரையப் பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பத்திரப்பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக ஆன்-லைனில் (இணையவழியில்) ஆவணங்களை பதிவு செய்யும் முறையினை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆன்-லைனில் ஈ.சி., போன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதான சேவை கிடைக்கவும் நேரில் வருகையற்ற பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17 ம் தேதி முதல் இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளது.
இந்த முறையில் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல்வீடு விற்பனை ஆகிய ஆவணங்களை தற்போது ஆன்-லைனில் பத்திரப்பதிவு செய்யலாம். மேலும் வங்கியாளர்கள் தனியார் வீடு, மனை, நிலம் போன்றவற்றை வங்கிக்கு முதன் முதலில் அடமானம் வைப்பதற்காக இணையத்தில் பதிவு செய்யலாம். இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நில விற்பனையாளர்கள் தங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை ஆன்-லைனில் சமர்ப்பிக்கலாம்.
ஆவணத்தை எழுதிக்கொப்பவர்கள், எழுதிப்பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விபரங்கள் மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை அப்லோடு செய்ய வேண்டும். ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் போட்டோ எடுக்கப்பட்டு கைரேகை அல்லது கருவிழிப்படலம் வழி ஆதார் சரிபாக்கப்பட வேண்டும். ஆன்-லைனில் கிரையப் பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை கட்டணம் செலுத்தி இணைய வழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.
இதில் ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின் சார்பதிவாளர் இணையவழியில் கேட்கும் கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம். ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த அலுவலக நாளுக்குள் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண ரசீது தொடர்புடைய சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு ஆன்-லைனில் கிரையப் பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை அனுப்பி வைக்கப்படும்.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 3 பதிவு மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு பதிவு மாவட்டத்திலும் 11 சப் ரிஜிஸ்டார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வருவாய் மாவட்டம் முழுவதும் 33 அலுவலகங்கள் உள்ளன.
தற்போது ஆன்-லைனில் கிரையப் பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை வந்த பின்னர் கடலுார் பதிவு மாவட்டத்தில் 300 பத்திரங்கள் ஆன்-லைனில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கியாளர்கள், மனைப்பிரிவில் ஈடுபட்டுள்ளவர்கள், பொதுமக்கள் இந்த நடைமுறையை வரவேற்றுள்ளனர். இதனால் வரும் காலத்தில் அதிகளவு பத்திரப்பதிவு இப்புதிய முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
