/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து எப்போது? ஏராளமானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
/
கடலுார் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து எப்போது? ஏராளமானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
கடலுார் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து எப்போது? ஏராளமானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
கடலுார் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து எப்போது? ஏராளமானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
ADDED : செப் 02, 2024 01:03 AM

கடலுார் : கடலுார் துறைமுகம் மேம்படுத்தும் பணி முடிவடைந்து கப்பல் போக்குவரத்து எப்போது துவங்கும் என கடலுார் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடலுார் துறைமுகம் வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உப்பனாறு (ம) பரவனாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி துறைமுகமாகும். ஆசியாவில் உள்ள பழைமையான துறைமுகங்களில் இதுவும் ஒன்று. இத்துறைமுகம் 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே இயற்கையாகவே 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது. அனைத்து காலங்களிலும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு உகந்த துறைமுகமாக இது கருதப்படுகிறது. நடுக்கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் இருந்து சிறுகலங்கள், மிதவைகள் மூலம் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம்.
இதற்கு முன், தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்ட் லிட்., கம்பெனியில் 'ப்ரொப்லின்' வாயு இறக்குமதி செய்தபோது, மக்கள் எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால் 2002ம் ஆண்டிற்கு பிறகு, இந்த துறைமுகத்திற்கு கப்பல் வருகை நிறுத்தப்பட்டது.
கடலுார் துறைமுகத்திற்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க முடிவு செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் சாகர்மாலா திட்டத்தில், கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்த 135 கோடி ரூபாய் நிதி ஒதுங்கீடு செய்யப்பட்டது.
சிறுகலன்கள் உள்நாட்டுக் கலன்களை கையாளக்கூடிய கப்பல் அணையும் துறைமுகமாக நீர்தடுப்பிகளை நீட்டிப்பு செய்தல், சரக்கு துறை கட்டுதல், கால்வாயினை துார்வாருதல் ஆகிய பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் இரண்டு கப்பல் அணையும் தளங்கள் அமைக்கும் வகையில், 2018 அக்டோபரில் மேம்படுத்தும் பணி துவங்கியது. கப்பல் அணையும் தளம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்தன.
துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தும் பணி ஏறக்குறைய முடிந்தும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பணி முடிவடைந்து கப்பல் வருமேயானால் பொதுமக்களுக்க நேர்முகமாகவும், மறைமுகவும் ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும். இதனால் மாவட்டம் வளர்ச்சி பெறும்.
இது குறித்து கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் கூறியதாவது: கடலுார் துறைமுகம் சாகர்மாலா திட்டத்தில் விரிவாக்கம் குறித்து கடல்சார் வாரிய இயக்குனரிடம் பேசியுள்ளேன். துறைமுக நுழைவு வாயில் குறுகலாக இருப்பதால் மேலும் நிலம் ஆஜிர்தபடுத்த வேண்டியிருப்பதாக கூறினார்.
கடலுார் துறைமுகம் தனியாருக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.