ADDED : ஜன 25, 2026 03:42 AM
மந்தாரக்குப்பம்: கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் கடைவீதியில் பல ஆண்டுகளாக, பயணிகள் நிழற்குடை அமைக்காததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப்பணிக்காக கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்பு மந்தாரக்குப்பம் கடைவீதியில் இருந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு சாலை விரிவாக்கப் பணி நடந்தது.
இச்சாலை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான பஸ்கள் செல்கின்றன. பல்வேறு பகுதியில் இருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நெய்வேலி மந்தாரக்குப்பம் கடைவீதிக்கு வந்து செல்கின்றனர். கடைவீதி பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பெரும்பாலும் அருகிலுள்ள கடைகளுக்கு முன்பு காத்திருக்கும் நிலை உள்ளது. கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி பஸ்நிறுத்தத்தில் தற்காலிக நிழற்குடை பந்தல் அமைத்து கொடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
