/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டன் நீர்த்தேக்கம் துார்வாருவது... எப்போது; திட்டக்குடி விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
வெலிங்டன் நீர்த்தேக்கம் துார்வாருவது... எப்போது; திட்டக்குடி விவசாயிகள் எதிர்பார்ப்பு
வெலிங்டன் நீர்த்தேக்கம் துார்வாருவது... எப்போது; திட்டக்குடி விவசாயிகள் எதிர்பார்ப்பு
வெலிங்டன் நீர்த்தேக்கம் துார்வாருவது... எப்போது; திட்டக்குடி விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 14, 2025 12:23 AM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே வெலிங்டன் நீர்தேக்கத்தை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் மாவட்டத்தின் மிகப்பெரும் நீர்தேக்கங்களில் ஒன்றான வெலிங்டன் நீர்தேக்கம் உள்ளது. கடந்த 1920ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த நீர்தேக்கம், 100 ஆண்டுகளை கடந்து விட்டது.
இதன் நீர்பிடிப்பு பரப்பு 16.60 சதுர கி.மீ., ஆகும். கரையின் நீளம் 4, 300 மீட்டர் ஆகும். முழு கொள்ளளவு 2, 580 மில்லியன் கன அடி. இதன் மூலம் நல்லுார், மங்களூர், விருத்தாசலம் ஒன்றியங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீர்தேக்கம் உருவாக்கப்பட்டது முதல் இதுநாள் வரை துார் வாரப்படாததால் வண்டல் மண் சேர்ந்து துார்ந்து போய் உள்ளது. கரைகளும் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதால் முழு கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியவில்லை.
கடந்த 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது 5 கோடி ரூபாய் மதிப்பில் கரை செப்பனிடப்பட்டது. பின், 2009ம் ஆண்டு 29.71கோடி ரூபாய் மதிப்பில் பாதிப்படைந்த கரைப்பகுதி புனரமைக்கப்பட்டது. 2017ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் 6.50 கோடி ரூபாய் மதிப்பில், ஷட்டர்கள் மற்றும் கரை சீரமைக்கப்பட்டன.
அதே ஆண்டில், கரையில் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய 1.48கோடி ரூபாயில் ரிங் வளைவு அமைக்கப்பட்டன. தொடர்ச்சியான பாதிப்புகளால் 32 அடி நீர்பிடிப்பு உயரம் தற்போது 29.72 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பருவமழையின் போது சேகரிக்கப்படும் நீர் தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இது போதுமானதாக இல்லாததால், கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் முறையாக விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் திட்டக்குடி தொகுதி விவசாயிகள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லக்கூடிய அவல நிலை உள்ளது.
வெலிங்டன் நீர்தேக்கத்தை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடந்த அ.தி.மு.க.,ஆட்சியில் ஜப்பான் நிதியுதவியுடன் 192 கோடி ரூபாய் மதிப்பில், வெலிங்டன் நீர்தேக்கத்தை துார்வார திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினர்.
தற்போது தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கடந்த பிப்., மாதம், கடலுாரில் நடந்த விழாவில் வெலிங்டன் நீர்தேக்கத்தை துார்வாரி புனரமைக்க 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் எதுவுமே செயல்பாட்டுக்கு வரவில்லை' என்றனர்.
நீர்வளத்துறை அதிகாரி கூறுகையில், நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டதும், பணிகள் துவங்கும்' என்றார்.