/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சில்மிஷ ஆசிரியருக்கு 'மணி' கட்டுவது யார்
/
சில்மிஷ ஆசிரியருக்கு 'மணி' கட்டுவது யார்
ADDED : அக் 16, 2024 06:51 AM
மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியை கொண்ட நகரில் உள்ள பெண்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, பிரச்னை பெரிதானது. ஆனாலும், தலைமை ஆசிரியர் முதல் சக ஆசிரியர்கள் வரையில், 'நமக்கேன் வம்பு' என, ஒதுங்கினர். சம்மந்தப்பட்ட ஆசிரியரின் மனைவி, அதே துறையில் அதிகாரம் மிக்க பதவியில் இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பின்னர் ஒருவழியாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வரையில், ஆசிரியர் மீது புகாரை கொண்டு சென்றுள்ளனர்.
மறுநாளே பள்ளிக்கு வந்த அந்த அதிகாரி விசாரித்ததில் உண்மை நிலை அறிந்தாலும் ஆதாரம் கிடைக்கவில்லை. மாணவியின் உறவினர்கள் கூட புகார் அளிக்க தயங்கினர். பின்னர் ஒருவழியாக பிரச்னைக்கு தீர்வு காண, அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர் பஞ்சாயத்து பேசி முடித்து, சில்மிஷ ஆசிரியரை, பக்கத்து ஊரில் உள்ள மற்றொரு பள்ளிக்கு இட மாற்றம் செய்துள்ளனர். மாற்றம் செய்யப்பட்ட பள்ளியும் மாணவிகள் பயிலும் பள்ளி என்பதால், சில்மிஷ ஆசிரியர் பற்றி தகவல் பரவ, அந்த ஊரை சேர்ந்த பெற்றோர் புலம்பலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, ஆண்கள் பள்ளிக்கு அவரை துாக்கியடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர் எதிர்பார்ப்பாக உள்ளது.