ADDED : மார் 31, 2026 11:19 PM
காட்டுமன்னார்கோவில்: சிதம்பரம் எம்.பி.,யாக உள்ள வி.சி.க., தலைவர் திருமாவளவன், மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது. அவர், இந்த முடிவை கட்சிக்குள் பல நெருக்கடிகளுக்கு இடையே எடுத்துள்ளார்.
மாநில அரசியலில் கவனம் செலுத்தும் வகையில், காட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த, 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வி.சி.க.,வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கோரி தலைமையில் விருப்பம் தெரிவித்தார்.
கடந்த முறை சீட்டு கேட்டு ஏமாற்றம் அடைந்த மாவட்ட செயலாளரும், கடலுார் துணை மேயருமான தாமரைச்செல்வனும் வாய்ப்பு கேட்டிருந்தார்.
மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பா, ஆசிரியர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் மணவாளன், விவசாய அணி பசுமைவளவன் உள்ளிட்ட பலர் கட்சித் தலைமையில் விருப்ப மனு அளித்தனர்.
தாமரைச்செல்வனுக்கு அவரது ஆதரவாளர்கள், 150க்கும் மேற்பட்டவர்கள் காட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளர் கோரி கட்சி தலைமையில் விருப்ப மனு அளித்தனர்.
இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன், கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வன் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது.
தலைமை பல முறை பஞ்சாயத்து செய்தும் பலன் இல்லை. கட்சி பொது செயலாளர் என்ற முறையில் சிந்தனைச்செல்வனுக்கு செய்யூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தாமரைச்செல்வனுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதி இருவருக்கும் இல்லை. நானே போட்டியிடுகிறேன் என திருமாவளவன் அறிவித்தார். இதனால் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமாவளவன் எம்.பி.,யாக இருப்பதால் மாநில அரசியலில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. மேலும் பல்வேறு பிரச்னைகளுக்காக தி.மு.க., கூட்டணியோடு மன வருத்தமுடன் கைகோர்த்து நிற்க வேண்டி உள்ளது. வி.சி.க., வலுவாக உள்ள கடலுார் மாவட்டத்தில் தலைமையை மீறி செயல்படுவதால், வலுவிழந்து வரும் கட்சியை சரி செய்யும் வகையில் மாநில அரசியலுக்கு திரும்புகிறார். இது மூத்த நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
