/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு காப்புக்காட்டில் குவியும் கழிவுகளால்...உணவுக்காக உயிரிழக்கும் வன விலங்குகள்
/
அரசு காப்புக்காட்டில் குவியும் கழிவுகளால்...உணவுக்காக உயிரிழக்கும் வன விலங்குகள்
அரசு காப்புக்காட்டில் குவியும் கழிவுகளால்...உணவுக்காக உயிரிழக்கும் வன விலங்குகள்
அரசு காப்புக்காட்டில் குவியும் கழிவுகளால்...உணவுக்காக உயிரிழக்கும் வன விலங்குகள்
ADDED : மார் 11, 2025 05:50 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசு காப்புக்காட்டில் அழுகிய உணவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி சாலையின் இருபுறமும் அரசு காப்புக்காடு உள்ளது. இங்கு மான், மயில், குரங்குகள் என வன விலங்குகள் அதிகளவு வசிக்கின்றன. அவற்றுக்கு பழங்கள், கிழங்கு உள்ளிட்ட உணவு வகைகள் இல்லாததால், குடியிருப்புகளை நோக்கி விலங்குகள் படையெடுப்பது தொடர்கிறது.
விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் மார்க்கத்தின் இருபுறம் காப்புகாடு இருப்பதால், அவ்வழியே செல்லும் பயணிகள் பொரி, பழங்களை வீசிச் செல்கின்றன. இதனால் சாலையின் இருபுறம் நுாற்றுக்கணக்கான குரங்குகள் உணவுக்காக காத்திருக்கின்றன.
வீசப்படும் உணவுகளை சாப்பிட சாலையை கடக்கும் போது, அவ்வழியே செல்லும் வாகனங்களில் சிக்கி குரங்குகள், மான்கள் பலியாவது தொடர்கிறது. மேலும், நகரில் உள்ள கடைகளில் இருந்து அழுகிய மற்றும் வீணான பழங்கள், உணவுப் பொருட்கள், இறைச்சி கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இவற்றை உணவுக்காக பயன்படுத்தும் குரங்குகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு இறக்கின்றன.
இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகும்போது, வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வர். அப்போது கழிவுகளை வீசிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை விடுவதுடன் எச்சரிக்கை முடிந்து விடும். அதன்பின், எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
எனவே, வன விலங்குகள் நலன் கருதி கருவேப்பிலங்குறிச்சி சாலையோரம் கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவு, குடிநீர் தட்டுப்பாடு
காப்புக்காட்டில் குடிநீர், உணவு கிடைக்காமல் அருகில் உள்ள ஆலிச்சிகுடி, பேரளையூர், சாத்துக்கூடல், நேமம் உள்ளிட்ட கிராமங்களுக்கும்; புறவழிச்சாலையை கடந்து சித்தலுார், காந்தி நகர், பெரியார் நகர் என நகர்ப்புற குடியிருப்புகளுக்கும் மான், மயில், குரங்குகள் படையெடுக்கின்றன. இவை, நாய்களிடம் சிக்கி உயிரிழக்கின்றன. எனவே, காப்புக்காட்டில் குடிநீர், உணவு தேவைகளுக்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு குறைபாடு
சமீபத்தில் விருத்தாசலம் நகர குடியிருப்பில் திருநங்கை சுருதி என்பவரை கொலை செய்து, ஆட்டோவில் சடலத்தை ஏற்றி வந்து காப்புக்காட்டில் வீசிச் சென்ற சம்பவம் நடந்தது. இதேபோல், மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் இப்பகுதியில் தொடர்கிறது. எனவே, காப்புக்காட்டில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து மர்ம நபர்களின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்.
கருவேல மரங்கள்
காப்புக்காடு முழுதும் கருவேல மரங்கள் மட்டுமே அதிகளவு காணப்படுகிறது. இதனால் தேங்கி நிற்கும் மழைநீரும் விரைவாக உறிஞ்சப்பட்டு, விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதுபோல் குரங்குகள் மரம் விட்டு மரம் தாவ முடியாமல், மிகுந்த சிரமமடைகின்றன. அவைகளுக்குள் சண்டையிடும்போது கருவேல மரக்கிளைகள் கிழித்து காயங்களை உண்டு பண்ணுகின்றன. எனவே, கருவேல மரங்களை அகற்றி, பழ வகை மரக்கன்றுகளை நட வேண்டும்.