மக்காச்சோளத்திற்கும் அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? தேவை அதிகரித்தும் லாபமில்லை என விவசாயிகள் வேதனை
மக்காச்சோளத்திற்கும் அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? தேவை அதிகரித்தும் லாபமில்லை என விவசாயிகள் வேதனை
UPDATED : அக் 08, 2026 08:38 PM
ADDED : அக் 08, 2026 07:53 PM

வேப்பூர்: சந்தையில் மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்தும் லாபம் கிடைக்காததால், மக்காச்சோளத்திற்கும் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் போர்வெல் மற்றும் திறந்தவெளி கிணறு மூலம், நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் செடிகளை சாகுபடி செய்கின்றனர். மேலும், மானாவாரி பயிர்களான பருத்தி, வரகு, எள், மணிலாவை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். சிலர், சவுக்கு, பூக்கள், காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர்.
மக்காச்சோளம் 'டிமாண்ட்'
இப்பகுதியில், நெல், மரவள்ளி, கரும்பு பயிர்களை சாகுபடி செய்யும் நிலையில், பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர் குறைவால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு மாற்றாக, பருவமழையில் கிடைக்கும் ஈரப்பதம் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் மக்காச்சோளத்தை கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். ஆண்டுதோறும் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளத்தை சாகுபடி செய்து, 1.20 லட்சம் டன் வரை அறுவடை செய்கின்றனர்.
அதை சேலம், நாமக்கல், ராசிபுரம் பகுதி வியாபாரிகள், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசின் எத்தனால் கலப்புக் கொள்கையால் எரிபொருள் தயாரிப்பு, மருந்து தயாரிப்பு, கோழி தீவனங்களுக்காக மக்காச்சோளத்தின் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. இது வரும் ஆண்டுகளில் கூடுதலாகும் என வேளாண் அலுவலர்கள் கூறுகின்றனர்.
விலை குறைவு
மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்தும், அதன் கொள்முதல் விலை விவசாயிகளுக்கு லாபமில்லை. உழவு, உரம், களை, மருந்து, அறுவடை உள்ளிட்டவைக்கு ஏக்கருக்கு தலா ரூ. 60 ஆயிரம் வரை செலவு செய்வதில், அரசு நிர்ணய ஆதார விலைக்கு கூட மக்காச்சோளத்தை வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை. கடந்தாண்டு, குவிண்டால் 2,400 ரூபாயாக, மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்தது. ஆனால், வெளி மார்க்கெட்டில், அரசு நிர்ணய விலையை விட, 700 ரூபாய் வரை குறைந்து, ரூ.1,700க்கு மக்காச்சோளத்தை கொள்முதல் செய்தனர். ஆண்டுதோறும் இதே நிலை தொடர்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.
கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
ஆண்டுதோறும் நெல் அறுவடை காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, நிர்ணய விலையில் நெல்லை கொள்முதல் செய்கிறது. அதேபோல், மக்காச்சோளத்திற்கும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து, நிர்ணய விலையில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
இது குறித்து பெரியநெசலூர் விவசாயி கூறுகையில், 'மக்காச்சோளத்தை அறுவடை செய்து மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகள் விற்றனர். அங்கு, கொள்முதல் செய்யும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு பணத்தை தாமதமாக வழங்குகின்றனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக வெளி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் மக்காச்சோளத்தை விற்கின்றனர். அவர்கள், உடனடியாக பணம் வழங்கினாலும், குறைந்த விலை, மூட்டைக்கு 2 கிலோ குறைப்பதால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். இதனை தடுக்க மக்காச்சோளத்திற்கும் அரசு கொள்முதல் நிலையம் திறந்தால் விவசாயிகள் பயன்பெறுவர்' என்றார்.
