காராமணிக்குப்பம் வார சந்தையில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
காராமணிக்குப்பம் வார சந்தையில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
ADDED : அக் 08, 2024 02:39 AM

நெல்லிக்குப்பம்: காரமாணிக்குப்பம் சந்தையில் அடிப்படை வசதியின்றி வியாபாரிகள் தவிக்கின்றனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடலுார் - பண்ருட்டி சாலையையொட்டி வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் வாரசந்தை நடைபெறும்.
இங்கு, அதிகளவு கருவாடு விற்பனைக்கு வரும். அதேபோல் 200க்கும் மேற்பட்ட காய்கறிகள் வியாபாரிகள் கடைகள் போடுவது வழக்கம். மேலும், ஆடு, மாடு, கோழிகள் விற்பனை என களைகட்டும்.
சந்தையில் விலை குறைவாக இருக்கும் என்பதால் அதிகளவில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிவர். சந்தையை குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரர்கள் கடை போடுபவர்கள் மற்றும் கால்நடைகள் விற்பனை செய்பவர்களிடம் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
சந்தை மூலம் பல லட்சம் வருமானம் கிடைக்கும் நிலையில், சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக சந்தை முழுதும் சேறும் சகதியுமானது. இதனால், வியாபாரிகள் மட்டுமின்றி பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும், சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரவும், சிமென்ட் தளம் அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் வியாபாாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
