ADDED : நவ 03, 2024 04:40 AM
விருத்தாசலம்: கஸ்பா ஏரியில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்காலனி, புறவழிச்சாலையின் இருபுறமும் கஸ்பா ஏரி பறந்து விரிந்துள்ளது.
இதன் நீர்ப்பிடிப்பு மூலம் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் ஏரியின் நடுவே புறவழிச்சாலை போடப்பட்ட நிலையில், பராமரிப்பின்றி பாழானது.
ஏரி முழுவதும் காட்டாமணி, கருவேல மரங்கள், ஆகாய தாமரை செடிகள் மண்டிக் கிடப்பதால் நீர்ப்பிடிப்பு குறைந்துள்ளது. மேலும் வண்டல் மண் எடுக்கும் பணிக்கு, முகப்பு பகுதிகளில் தாறுமாறாக பள்ளங்கள் தோண்டியதால் கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, கஸ்பா ஏரியை துார்வாரி, நீர்ப்பிடிப்பு அதிகரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.