/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்படுமா?: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்
/
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்படுமா?: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்படுமா?: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்படுமா?: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்
ADDED : மார் 09, 2024 03:08 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் குற்றச் செயல்களை கண்காணித்து, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்திட சிசிடிவி., கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை - திருச்சி, சேலம் - கடலுார் ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் மற்றும் சரக்கு ரயில்கள் என 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், மும்பை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களுக்கும் ரயில் வசதி உள்ளது.
மாவட்டத்தில் மிகப்பெரிய ரயில் நிலையமாக இருப்பதால், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, புவனகிரி, பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்ட மக்களும் வந்து செல்கின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட தேவைகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு அதிகரித்துள்ளது. நடைமேடையில் பயணிகளிடம் உடமைகள் திருடு போனாலும் குற்றவாளிளை கண்டறிய முடியாத நிலை தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைமேடை அருகே நடைபயிற்சி சென்ற முதியவர் முகத்தில் மிளகாய்ப்பொடி துாவி ஏழு சவரன் செயின் பறிக்கப்பட்டது. அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் குற்றவாளிகளை கண்டறிய முடிவதில்லை. நடைமேடைகளில் கேமரா வசதி இல்லாமல், சந்தேக நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகளை கண்காணிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
6 ஆண்டுகளாக கிடப்பில்
கடந்த 2016, ஜூன் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு, ஆகஸ்ட் 8ம் தேதி, சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு, ரிசர்வ் வங்கிக்கு எடுத்துச் சென்ற 5.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்குகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் நிலையங்களில் சிசிடிவி., கேமராக்கள் பொருத்தப்படும் என அப்போதைய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதியளித்தார். அதில், தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் விருத்தாசலம், தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையங்களில் கேமராக்கள் பொறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 8 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ரயில் பயணம் அதிகரிப்பு
பஸ் கட்டண உயர்வு, கிளாம்பாக்கம் பஸ் நிலைய குளறுபடி காரணமாக பயணிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்திப்பதால், ரயில் பயணத்தை விரும்புகின்றனர். கடந்த சில மாதங்களாக ரயிலில் பயணம் செய்வது இருமடங்காக அதிகரித்துள்ளது.
மேலும், கார், பஸ் போன்ற வாகனங்களில் செல்வதை விட ரயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதால், ரயிலில் பயணிப்பதை பயணிகள் விரும்புகின்றனர். தற்போது, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் முகப்பு, டிக்கெட் அறை, காத்திருப்பு கூடம், நடைமேடைகள் விஸ்தரிப்பு போன்ற நவீன வசதியுடன் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இதனுடன், பயணிகள் பாதுகாப்பு கருதி, சிசிடிவி., கேமராக்கள் பொருத்த வேண்டும்.
எனவே, ரயில் நிலைய நடைமேடைகள், முகப்பு, குட்ெஷட் என அனைத்து பகுதிகளிலும் இரவிலும் இயங்கும் வகையில் நவீன கேமராக்களை பொருத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

