/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு இ-சேவை மையங்களில் உபகரணங்கள் சீரமைக்கப்படுமா? மாவட்டத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
/
அரசு இ-சேவை மையங்களில் உபகரணங்கள் சீரமைக்கப்படுமா? மாவட்டத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
அரசு இ-சேவை மையங்களில் உபகரணங்கள் சீரமைக்கப்படுமா? மாவட்டத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
அரசு இ-சேவை மையங்களில் உபகரணங்கள் சீரமைக்கப்படுமா? மாவட்டத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
ADDED : பிப் 12, 2024 06:32 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசின் இ-சேவை மையங்களில் பழுதான ஸ்கேனர் உள்ளிட்ட இயந்திரங்களை சரி செய்ய வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில் இ-சேவை மையங்கள் வாயிலாக வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு காவல் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, மின் வாரியம், தேர்தல் ஆணையம், கல்வித் துறை என, பல்வேறு துறைகள் சார்பில் 50க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு சேவைக்கும் அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் வாரியாக 15க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் ஸ்கேனர், பிரின்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் பழுதாகி காட்சிப் பொருளாக உள்ளன. ஆதார் உள்ளிட்ட சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
சில நேரங்களில் வேறு வழியின்றி ஊழியர்கள் தங்கள் மொபைல் போனில், பொதுமக்களின் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவு செய்கின்றனர். இதனால், ஊழியர்களுக்கு கூடுதல் நேரம், பணிச்சுமை ஏற்படுவதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
விண்ணப்பதாரர் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது, அவர் கூறிய விவரங்களை இ-சேவை மைய ஊழியர்கள் டைப்பிங் செய்ய வசதியாக ஒரு கணினி பயன்படுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர் தான் கூறிய விவரங்கள் சரியாக உள்ளதா என, பார்த்து தவறு இருந்தால் அதை கூறி திருத்தம் செய்து கொள்ள வசதியாக மற்றொரு கணினி பயன்படுத்தப்படும்.
இதன் காரணமாக எவ்வித பிழையும் இன்றி சான்றிதழ் பெறப்பட்டது. விண்ணப்பதாரர்கள் சரிபார்க்கக் கூடிய கணினிகள் பழுது ஏற்பட்டுள்ளதால் இ-சேவை மைய ஊழியர்கள் பயன்படுத்தும் கணினியிலேயே விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், குறைபாடுகளை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு மீண்டும் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. தனியார் இ-சேவை மையங்களை தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுவதால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவாகிறது.
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, கூடுதல் உபகரணங்களை வழங்குவதுடன், பழுதான இயந்திரங்களை சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.