முன்கூட்டியே நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? குறுவை விவசாயிகள் எதிர்பார்ப்பு
முன்கூட்டியே நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? குறுவை விவசாயிகள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 30, 2026 08:54 PM
ADDED : ஜூன் 30, 2026 08:31 PM

பெண்ணாடம்:பெண்ணாடம் பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணிகள் துவங்க உள்ளதால் முன்கூட்டியே நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் முதிர்ந்துள்ளதால் மூட்டைகள் தேக்கத்தை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள மாளிகைக்கோட்டம், தாழநல்லுார் , கிளிமங்கலம், திருமலை அகரம், கோனுார் , வடகரை, நந்திமங்கலம், செம்பேரி, சவுந்திரசோழபுரம், இறையூர், கொத்தட்டை உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் நடவு செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் அறுவடை துவங்கும் போது, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் முன்கூட்டியே மாவட்டத்தில் அந்தந்த முக்கிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம்.
கடந்த சில தினங்களாக பெண்ணாடம் பகுதி கிராமங்களில் குறுவை அறுவடை பணிகள் துவங்கி, நடந்து வருகிறது.
ஆனால், பெண்ணாடம், மாளிகைக்கோட்டம், வெண்கரும்பூர், தாழநல்லுார், திருமலை அகரம், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கவில்லை. இருப்பினும், விவசாயிகள், நம்பிக்கையோடு அறுவடை பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.
அதனால், விவசாயிகளின் நலன்கருதி, பெண்ணாடம் பகுதி கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகம், தமிழக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
வயலில் நெற்கதிர்கள் முதிர்ந்து, சாய்ந்து வருகின்றன. அறுவடை பணிகளை துவக்கி உள்ளோம். கோடை மழை துவங்கி உள்ளதால் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழை பெய்தால் நெற்கதிர்கள் தரையில் சாய்ந்து வீணாக வாய்ப்பு உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை திறந்தால் விவசாயிகள் பாதிப்புகள் குறையும்.
தற்போது அறுவடை பணிகளும் தீவிரமாக துவங்கி வருவதால் மூட்டைகளும் அதிகளவில் கொள்முதல் நிலையம் வர வாய்ப்புள்ளன.
அதிக நெல் மூட்டைகள் சேரும் முன்பு கொள்முதல் நிலையங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
