மங்கலம்பேட்டை புறவழிச்சாலை ஓடை ஆக்கிரமிப்பு... அகற்றப்படுமா:மழைக் காலங்களில் விளைநிலங்கள் மூழ்கும் அபாயம்
மங்கலம்பேட்டை புறவழிச்சாலை ஓடை ஆக்கிரமிப்பு... அகற்றப்படுமா:மழைக் காலங்களில் விளைநிலங்கள் மூழ்கும் அபாயம்
UPDATED : செப் 02, 2026 02:08 AM
ADDED : செப் 01, 2026 07:31 PM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் ஓடையை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக மாற்றியுள்ளதால் மழைக்காலங்களில் விளைநிலங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.: விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை வழியாக விழுப்புரம், சென்னை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, வேலுார், பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தினசரி பஸ், வேன் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறுகிய சாலையில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது வாடிக்கையானது.
இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தின் கீழ் 136 கோடி ரூபாயில், விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் வரை 22 கி.மீ., தொலைவிற்கு விரிவாக்கப் பணிகள் நடந்தன. இதற்காக சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு, மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
மேலும், உளுந்துார்பேட்டை பிரதான சாலையில் உள்ள மங்கலம்பேட்டை பேரூராட்சி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்லும் போது, பிற வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன. இதையடுத்து, ரூபநாராயணநல்லுார் சமத்துவபுரம் முதல், மங்கலம்பேட்டை பேரூராட்சி எல்லை வரை 5 கி.மீ., தொலைவிற்கு புறவழிச்சாலை போடப்பட்டது.
தற்போது, நெடுந்துார மற்றும் கனரக வாகனங்கள் புறவழிச்சாலையில் செல்கின்றன. இதனால், புறவழிச்சாலையோர விளைநிலங்கள், படிப்படியாக வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக, புறவழிச்சாலையோர நிலங்களின் உரிமையாளர்கள் சிலர், ஓடையை துார்த்து கட்டடம் கட்டியும், வீட்டுமனைகளாக மாற்றியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
குறிப்பாக, மங்கலம்பேட்டை அடுத்த கர்ணத்தம், விசலுார், எம்.அகரம் கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் இருந்து மழைநீர் வழிந்தோடி, புறவழிச்சாலை ஓடை வழியாக ரூபநாராயணநல்லுார் பெரிய ஏரிக்கு வந்தடையும். இங்கிருந்து கோ.பூவனுார், மாத்துார் உள்ளிட்ட கிராமங்களை கடந்து, மணிமுக்தாற்றுக்கு மழைநீர் செல்லும்.
ஆனால், மங்கலம்பேட்டை புறவழிச்சாலையோர ஓடையை ஆக்கிரமித்து விளைநிலங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாற்றியதால் நீர்வழி பாதை தடுக்கப்பட்டு விட்டது. இதனால் பருவமழை காலங்களில் ஏரிகளில் இருந்து பாய்ந்தோடி வரும் மழைநீர், எம்.அகரம் கிராம விளைநிலங்களை மூழ்கடித்து விளைச்சலை பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல், ஓடையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டு விட்டதால், ரூபநாராயணநல்லுார் பெரிய ஏரிக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. இதனால், அங்கிருந்து மாத்துார், பூவனுார் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓடைப்பாசனமும் தடுக்கப்பட்டு விட்டது.
இது குறித்து பொது மக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மங்கலம்பேட்டை புறவழிச்சாலை ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், வீட்டுமனைகளை உடனடியாக அகற்றி, ஓடையை துார்வார வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு விளைநிலங்களை மீட்டு, ஓடையின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என பத்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அளவீடு பணி என்னாச்சு புறவழிச்சாலையோர ஓடை மீதான ஆக்கிரமிப்பு குறித்து இந்திய குடியரசு கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் மங்காபிள்ளை, கலெக்டருக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார். அதன்பேரில், கடந்த இரு வாரங்களுக்கு முன் விருத்தாசலம் நில அளவைத்துறை அதிகாரிகள், ஓடையில் அளவீடு செய்தனர். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு நிலம், அதனை அகற்றுவது குறித்து எந்தவித தகவலும் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
விவசாயிகள் புகார் ரூபநாராயணநல்லுார் ஏரிக்கு செல்லும் பிரதான நீர்வழிப்பாதையை துார்த்து வீட்டுமனைகளாக மாற்றி விட்டதால், நீரின் ஓட்டம் தடைபடுவதுடன் ஏரி பாசனம் பெறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகின்றனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மின்துறை அலட்சியம் மாநிலம் முழுவதும் மின் இணைப்புக்கு பணம் செலுத்தியும் பல மாதங்களாக காத்திருக்கும் நிலையில், மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் வீட்டு மனைகளுக்கு மின் இணைப்பு வழங்கியது கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, போர்வெல் போடுவது போன்ற எந்தவித பயன்பாடும் இல்லாத நிலையில், புரோக்கர்கள் ஆதிக்கத்தால் வீட்டுமனைகளுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
