போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள உழவர் சந்தை மாற்றப்படுமா?: முழுக்க தரைக்கடைகளாக வியாபித்துள்ள அவலம்
போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள உழவர் சந்தை மாற்றப்படுமா?: முழுக்க தரைக்கடைகளாக வியாபித்துள்ள அவலம்
UPDATED : செப் 21, 2026 04:26 AM
ADDED : செப் 20, 2026 08:32 PM

கடலுார்: கடலுார் உழவர் சந்தை நெடுங்சாலை யோரத்தில் அமைந்திருப்பதால் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் போலீசார் தினமும் மல்லுகட்டவேண்டியுள்ளது.
உழவர் சந்தை என்பது தமிழ்நாடு அரசால் 1999 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. இது விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்க ஒரு சந்தையை இருந்து வருகிறது.
இந்தத் திட்டம் இடைத்தரகர்களை நீக்கி, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் பயனளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதால், அதிக லாபம் ஈட்ட முடிகிறது. நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கின்றன. உழவர் சந்தைகள், விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதனால் கிராமப்புறங்களில் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் வலுவடைகிறது.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் நுகர்வோருக்கு மலிவு விலையில் தரமான பொருட்களை வழங்குவது என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாவட்டத்தின் பல இடங்களில் உழவர் சந்தை செயல்படாமல் போனாலும், கடலுாரில் துவக்கத்தில் இருந்தே வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் விவசாயிகள் எல்லாம் போய் முழுக்க முழுக்க வியாபாரிகள் ஆட்டிப்படைக்கும் இடமாக மாறிவிட்டது. அதிகாலை நேரத்தில் தொடங்கப்படும் இந்த சந்தையில் காய்கறிகள் விலை பெரிய அளவில் குறைவாக விற்பனை செய்யப்படுவதில்லை. துவக்க காலத்தில் முழுவதும் விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த உழவர் சந்தை வியாபாரிகள் மட்டுமே பயன்படுத்தும்படி ஆகிவிட்டது.
காய்கறிகளுக்காக துவங்கப்பட்ட இந்த சந்தை பழக்கடைகளாகவும், தரைக்கடைகள் முழுக்க வியாபித்துள்ளன. இது தவிர காலை நேரங்களில் உழவர் சந்தைக்குள் செல்ல முடியாமல் சாலையிலேயே வியாபாரம் நடக்கிறது. அதனால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இவர்களை சாலையில் இருந்து ஒதுக்கி வியாபாரம் செய்ய வைக்க தினமும் ஒரு போலீஸ் குழு தேவைப்படுகிறது.நன்கு வளர்ந்துவிட்ட மாநகரத்தில் தற்போதுள்ள உழவர் சந்தை மாற்றப்பட வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது. அதாவது மோகினிப்பாலம் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் உழவர் சந்தையை மாற்றி அமைத்தால் போக்குவரத்துப்பிரச்னை அறவே இருக்காது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
