/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேமாத்துார் அணைக்கட்டு பாசன வடிகால் துார்வாரப்படுமா?: வடகிழக்கு பருவமழை நீர் வீணாகும் அபாயம்
/
மேமாத்துார் அணைக்கட்டு பாசன வடிகால் துார்வாரப்படுமா?: வடகிழக்கு பருவமழை நீர் வீணாகும் அபாயம்
மேமாத்துார் அணைக்கட்டு பாசன வடிகால் துார்வாரப்படுமா?: வடகிழக்கு பருவமழை நீர் வீணாகும் அபாயம்
மேமாத்துார் அணைக்கட்டு பாசன வடிகால் துார்வாரப்படுமா?: வடகிழக்கு பருவமழை நீர் வீணாகும் அபாயம்
ADDED : அக் 08, 2024 02:50 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் மேமாத்துார் அணைக்கட்டு பாசன வாய்க்கால்கள் முட்புதர் மண்டி துார்ந்து கிடப்பதால், பருவமழை நீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் அடுத்த மேமாத்துாரில், 1869ம் ஆண்டில் அணைக்கட்டு கட்டப்பட்டது. கல்வராயன் மலையிலிருந்து மணிமுக்தாறு வழியாக வரும் தண்ணீர் மற்றும் மழைநீரை மேமாத்துார் அணைக்கட்டில் தேக்கி வைத்து, கொடுக்கூர் பெரிய ஏரி, சித்தேரி, சின்னக்குட்டி உடையார், பெரம்பலுார், பரவளூர், தொரவளூர், சாத்துக்கூடல், கோமங்கலம் உட்பட 15 கிராம ஏரிகளில் நீர்ப்பிடிப்பு கிடைக்கிறது.
4,500 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்றன. நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஏரிகளில் நீர்ப்பிடிப்பு இருப்பதால் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து போர்வெல் பாசனம் செயல்பட்டன.
மேலும், மேல்நிலை தொட்டிகளுக்கு எளிதில் நீரேற்றி, குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக அணைக்கட்டிலிருந்து பாசன வாய்க்கால் மற்றும் ஏரிகளுக்கு செல்லும் பிரிவு வாய்க்கால்களில் சம்பு, கோரை புற்கள், கருவேல மரங்கள், காட்டாமணி செடிகள் அதிகளவு மண்டி துார்ந்தது.
இதனால் தண்ணீர் வழிந்தோட வழியின்றி, ஆங்காங்கே தேங்கும் அவலம் உள்ளது. மேலும் அணைக்கட்டில் இருந்து வரும் தண்ணீர் ஆங்காங்கே சாலையில் வழிந்தோடி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் துார்ந்துள்ள வாய்க்கால்களில் நீர்வரத்து தடைபடுவதால் ஏரிகளில் முழு கொள்ளளவு தடைபடுகிறது.
இதனால் போர்வெல் பாசனமும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
விளாங்காட்டூர், தொரவளூர், பரவளூர், கோமங்கலம், மணவாளநல்லுார், ஆலிச்சிகுடி வழியாக செல்லும் வாய்க்கால்கள் முற்றிலுமாக துார்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில், மழைநீரை ஏரிகளில் சேமிக்கும் வகையில் வாய்க்கால்களை துார்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.