சம்பா சாகுபடி கை கொடுக்குமா... வீராணம் நிரம்பாததால் விவசாயிகள் கலக்கம்
சம்பா சாகுபடி கை கொடுக்குமா... வீராணம் நிரம்பாததால் விவசாயிகள் கலக்கம்
ADDED : செப் 15, 2026 07:52 PM

சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் துவங்கி லால்பேட்டை வரை உள்ள வீராணம் ஏரி. 14 கி.மீ., நீளமும், 5 கி.மீ., அகலப் பரப்பளவை கொண்ட இந்த ஏரியில் 1465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த ஏரி மூலம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று சம்பா பட்டம் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் கடுமையான வெப்பம் மற்றும் மழை பொய்த்து போனதால் ஏரிக்கு வரத்து இன்றி வறண்டு வருகிறது. தற்போது ஏரியில் 179 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக மெட்ரோ நிறுவனம் விநாடிக்கு 56 கன அடி தண்ணீர் அனுப்பி வருகிறது.
கடந்த 1ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம், கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 210 கன அடி தண்ணீர் வடவாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும், ஏரி இன்னும் நிரம்பவில்லை. இதனால், இந்தாண்டு சம்பா பருவத்திற்கு ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது என்பது கானல் நீராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் வீராணம் ஏரியிலிருந்து வரும் கொண்டு தண்ணீரை சம்பா நாற்றாங்கால் விடுவதற்கு காத்திருந்த விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
ஏரி பாசனத்தை நம்பி சம்பா நேரடி விதைப்பு செய்துள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு இந்தாண்டு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் என்ன செய்வதென்று புரியாமல் கலக்கத்தில் உள்ளனர்.
