/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டன் நீர்தேக்கம் துார்வாரும் அறிவிப்பு... வெளியாகுமா? பட்ஜெட்டில் நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
வெலிங்டன் நீர்தேக்கம் துார்வாரும் அறிவிப்பு... வெளியாகுமா? பட்ஜெட்டில் நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
வெலிங்டன் நீர்தேக்கம் துார்வாரும் அறிவிப்பு... வெளியாகுமா? பட்ஜெட்டில் நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
வெலிங்டன் நீர்தேக்கம் துார்வாரும் அறிவிப்பு... வெளியாகுமா? பட்ஜெட்டில் நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
UPDATED : ஏப் 02, 2025 07:54 AM
ADDED : ஏப் 02, 2025 06:32 AM

திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கத்தை துார்வாரி, கரைகளை பலப்படுத்தவும் அறிவிக்கப்பட்ட ரூ.130 கோடியை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் மாவட்டத்தின் மிகப்பெரும் நீர்தேக்கங்களில் ஒன்றான வெலிங்டன் உள்ளது. நுாறு ஆண்டுகள் பழமையான நீர்தேக்கமானது. இதன் மூலம் நல்லுார், மங்களூர், விருத்தாசலம் ஒன்றியங்களைச் சேர்ந்த 24,000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு நுாறு ஆண்டுகள் ஆன நிலையில், நீர்தேக்கம் துார் வாரப்படாததால் வண்டல் மண் சேர்ந்து துார்ந்துள்ளது. கரைகளும் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதால் முழு கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடிவதில்லை.
பருவமழையின் போது பாதியளவு நீரே தேக்கி வைத்து பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு போதிய நீரை வழங்க முடியாத நிலை உள்ளதால், விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்படுகின்றனர்.
வெலிங்கடன் நீர்தேக்கத்தை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும், பாசன வாய்க்கால்களை முறையாக துார்வார வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. கடந்த அ.தி.மு.க.,ஆட்சியில் ஜப்பான் நிதியுதவியுடன் 192 கோடி ரூபாய் மதிப்பில், வெலிங்டன் நீர்தேக்கத்தை துார்வார திட்டமதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது என கூறி வந்தனர்.
தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதயில் கூறியபடி கடந்த பிப்., மாதம், கடலுாரில் நடந்த விழாவில் வெலிங்டன் நீர்தேக்கத்தை துார்வாரி புனரமைக்க 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நீர்வளத்துறை மானிய கோரிக்கையின் போது, வெலிங்டனை துார்வாரும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அறிவிப்பு வரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், அறிவிப்பு வராததால் ஏமாற்றமடைந்தனர். பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள் 110விதியின் கீழ், முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளதால், வெலிங்டன் பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அமைச்சரின் கூடுதல் கவனம் தேவை
வெலிங்டன் நீர்தேக்கம், இப்பகுதி விவசாயிகளின் பிரதான நீர் ஆதாரமாக உள்ளது. நீர்தேக்கம் துார்ந்துபோனது, கரைகள் பலவீனம் காரணமாக முழு கொள்ளவு நீர்தேக்க முடியாமல் விவசாயிகள் முறையாக விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயத்தையே பிரதானமாக நம்பி உள்ள இப்பகுதி மக்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், வறுமையின் பிடியில் சிக்கி கூலிவேலைக்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான கணேசன், வெலிங்டன் நீர்தேக்கத்தை துார்வாரி, புனரமைக்க நடவடிக்கை எடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

