திண்டிவனம் - கடலுார் ரயில்பாதை திட்டம் மீண்டும் புத்துயிர்பெறுமா?: போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் எதிர்பார்ப்பு
திண்டிவனம் - கடலுார் ரயில்பாதை திட்டம் மீண்டும் புத்துயிர்பெறுமா?: போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜன 06, 2026 10:10 PM
ADDED : ஜன 06, 2026 03:42 AM

கடலுார்;ஜன. 26- திண்டிவனம் - கடலுார் ரயில்பாதை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திடம் கடலுார் மாவட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கடலுார் - புதுச்சேரிக்கு இடையே பஸ் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு 1 அல்லது 2 நிமிட இடைவெளியில் பஸ்கள் புதுச்சேரிக்கு செல்கிறது. அப்படி இருந்தும் அனைத்து பஸ்களும் நிரப்பி வழிந்து செல்கிறன. இதுதவிர ஏராளமான பயணிகள் சொந்த வாகனங்களான பைக், கார்களிலும் அதிக அளவில் பயணிக்கின்றனர்.
இதனால், புதுச்சேரி-கடலுார் வழிநெடுக நகரமாகிவிட்டது. வழி நெடுங்க சாலையோரம் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால், கடலுார் - புதுச்சேரி கிடைப்பட்டத 25 கிலோ மீட்டர் துாரத்தை கடக்க ஒரு மணி நேரமாகி விடுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட புதிய பஸ் ரூட்டில் பயண நேரம் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் இன்றைய போக்குவரத்து நெரிசலுக்குள் செல்ல பஸ் டிரைவர்கள் மின்னலாய் பறந்து வாகனத்தை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடலுாரில் இருந்து ஏராளமானோர், புதுச்சேரி, திண்டிவனம், சென்னைக்கு பணியின் காரணமாக சென்று வருகின்றனர். பொது மக்களுக்கு இதை விட்டால் வழியில்லை.
கிடப்பில் போடப்பட்ட திட்டம் இந்நிலையில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக, ஆந்திராவை இணைக்கும் வகையில், திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டம் 2006ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஏறத்தாழ 180 கி.மீ., துாரம் உடைய இந்த ரயில்பாதை, திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை வழியாக நகரி செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது.
போதிய நிதி ஒதுக்காதது, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னையால், இந்த திட்டப் பணியில் பல ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டது. இந்த திட்டம் துவங்கி, 19 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ஒரு சில பணிகளே முடிக்கப்பட்டுள்ளன. எனவே இத்திட்டத்தை முழுமையாக கொண்டுவர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதால் இத்திட்டத்தில் ஒரு பகுதியான திண்டிவனம் - கடலுார் இடையே, புதுச்சேரி வழியாக 77 கி.மீட்டருக்கு புதிய ரயில்பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை மத்திய ரயில்வே அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு இத்திட்டத்தில் சிறு மாற்றம் செய்து, புதுச்சேரி - கடலுார் ரயில்வே திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என, சர்வேயின்போது மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு வலியுறுத்தியது. திண்டிவனம் - புதுச்சேரி - கடலுார் ரயில்வே திட்டத்தை செயல்படுத்த, 77 கி.மீ., துாரத்திற்கு சர்வே எடுக்கப்பட்டது.
பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்கள் வழியாகவும், விளை நிலங்கள் பாதிக்காத வகையிலும் ரயில் பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.
ஆனால், நிலம் கையகப்படுத்த புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகளும் நடவடிக்கை எடுக்காததால், சர்வே நடத்தியதோடு, இந்த ரயில்வே திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் புதுச்சேரி, திண்டிவனம், கடலுார் நகரங்களின் போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்த தீர்வு கிடைத்திருக்கும்.
திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதைக்கு, 2006ல் மொத்த திட்ட மதிப்பீடு, 582 கோடி ரூபாயாக இருந்தது. இந்த திட்ட மதிப்பு தற்போது, 3,631.34 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கி உடனடியாக ரயில்வே அமச்சகம் நடவடிக்கை எடுக்காது என்பதால், திண்டிவனம் - கடலுார் ரயில்பாதை திட்டத்தை உடனே செயல்படுத்த புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது.
திண்டிவனம் ரயில் நிலையம் - மயிலம் - சேதராப்பட்டு - வில்லியனுார் - பாகூர் - கடலுார் வரை இந்த ரயில்வே திட்டம் அமையும். தொலைதுாரம் செல்லும் பயணிகள் விழுப்புரம் அல்லது விருத்தாசலம் சென்று ரயிலை பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்டத்தின் தலைநகராக கடலுார் இருந்தாலும் வெறும் பாசஞ்சர் ரயில்மட்டுமே இங்கிருந்து இயக்கப்படுகிறது.
இந்த பாதை இணைக்கப்பட்டால் வடமாநில ரயில்கள் வந்து செல்லும் ரயில் நிலையமாக கடலுார் உருவாகும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் தென் மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் அதீதி வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, திண்டிவனம் - புதுச்சேரி - கடலுார் ரயில் பாதை திட்டத்தை விரைவுப்படுத்த புதுச்சேரி அரசுடன் இணைந்து, தமிழக அரசு ரயில்வே அமைச்சகத்திற்கு அழுத்தம் கொடுப்பதுடன், நிலம் கையப்படுத்துதல், நிதி ஒதுக்கீடிற்கும் வழிவகை செய்ய வேண்டும்.
