வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி துவக்கம்
வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி துவக்கம்
ADDED : ஏப் 12, 2026 03:49 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி துவங்கியது.
கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 20,34,971 வாக்காளர்கள் உள்ளனர். 2,590 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, வாக்காளர்கள் எளிதில் வந்து ஓட்டளிக்க வசதியாக சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் சீட்டில், மாநிலம், சட்டசபை தொகுதி, வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தை பெயர், பாகம் எண், பாகத்தின் பெயர், வரிசை எண், ஓட்டுச்சாவடி மையத்தின் பெயர், ஓட்டுப்பதிவு நாள், ஓட்டுப்பதிவு நேரம், தேர்தல் ஆணைய இணையதள முகவரி, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கடலுார் சட்டசபை தொகுதியில் 258 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. 1,06,187 ஆண்கள், 1,16,882 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 80 பேர் என, மொத்தம் 2,23,149 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி நேற்று துவங்கியது. கடலுார் திடீர்குப்பம் எம்.ஜி.ஆர்., நகரில் தகவல் சீட்டு வழங்கும் பணியை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சுந்தரராஜன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் விடுபடாமல் தகவல் சீட்டு வழங்க வேண்டும் என, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு அறிவரை வழங்கினார்.
